Tamannaah: "எங்களுக்கும் சொந்த வாழ்க்கை இருக்கிறது.. புரிந்து கொள்ளுங்கள்” நடிகை தமன்னா வேதனை..!
சமீப காலமாக நடிகை தமன்னா பற்றி காதல் வதந்திகள் பரவி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமன்னா பேசியுள்ளார்.
இந்திய சினிமா உலகில் ஜொலிக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் தமன்னா பாட்டியா. தனது 15 ஆவது வயதிலேயே சந்த் சா ரோஷன் செஹ்ரா என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமானார். பின்னர், தெலுங்கில் ஸ்ரீ படத்தில் நடித்தார். கேடி படத்தில் நெகடீவ் ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தமன்னா
இதனையடுத்து, கல்லூரி திரைப்படத்தில் நடித்ததின் மூலம் சிறந்த அங்கீகாரத்தைப்பெற்ற இவர் தொடர்ந்து, வியாபாரி, அயன், பையா, பாகுபலி போன்ற பல்வேறு படங்களில் தன்னுடைய நடிப்பைத் திறம்பட வெளிப்படுத்தியுள்ளார். இதுபோன்ற பல வெற்றிப்படங்களின் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னா, கடைசியாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆக்சன் என்ற தமிழ்ப்படத்தில் நடித்திருந்தார்.
இதனையடுத்து இவருக்கு தமிழில் எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. ஆனால் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். நடிகைகள் பலர் வெப் சீரிஸில் கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்திரா சுப்ரமணியம் இயக்கிய நவம்பர் ஸ்டோரி வெப் தொடரில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருந்தார். இதனையடுத்து சினிமாத்துறையை விட்டு வெப் சீரிஸில் நடிப்பதில் தமன்னா அதிக ஆர்வம் காட்டிவருகிறார்.
தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் ரஜினியின் ஜெயிலர் படித்தில் நடித்து வருகிறார். அடுத்தபடியாக சுந்தர்சியின் அரண்மனை 4ஆம் பாகத்தில் தமன்னா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா
இந்நிலையில், தமன்னாவும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் காதலிப்பதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த ஆண்டு நியூ இயர் கொண்டாட்டத்தின்போது இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலான நிலையில், அது முதல் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் பரவின. மேலும், இயக்குநர் சுஜோய் கோஷின் அடுத்த படமான ’லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ படத்தில் விஜய் வர்மாவும் தமன்னாவும் இணைந்து நடிக்கும் நிலையில், பட ஷூட்டிங் தொடங்கியது முதலே இருவரும் காதலித்து வருவதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுத்தன.
”நான் காதலிக்கிறேனா?”
இதற்கிடையில் சினிமாவில் தனது 18 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் தமன்னா. இந்நிலையில் தமன்னா தன்னை பற்றிய கிசிகிசுக்களுக்கு மறுத்து விளக்கமும் அளித்துள்ளார். அதில், ”நான் காதலிக்கிறேனா? இதுபோன்ற வதந்திகளை யார் பரப்புகிறார்கள் என தெரியவில்லை. நான் காதலிப்பதாக சொல்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது. அனைவருக்கும் சொந்த வாழ்க்கை இருக்கிறது. அதனை புரிந்து கொள்ளுங்கள்” என்று தமன்னா தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
18 ஆண்டுகளை நிறைவு செய்த தமன்னா
மேலும், தனது சினிமா பயணத்தை பற்றி கூறிய அவர், "சினிமாவில் 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. மனதுக்கு நிறைவானதாகவும் உள்ளது. நிறைய விஷயங்களில் முதிர்ச்சி அடைந்துள்ளேன். இது ஆரம்பம் தான். ஒவ்வொரு நாளும் கற்றுக் கொண்டே இருக்கிறேன். ரசிகர்கள் என் மீது அதிக அன்பு செலுத்துகின்றனர். எனக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கு நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் தமன்னா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.