"நான் பேசவே மாட்டேன்! நகுல் தானா வந்து பேசுவாரு" நடிகை சுனைனா பரபரப்பு பேட்டி
காதலில் விழுந்தேன் படத்தில் தன்னுடன் நடித்த நகுல் பற்றி அவருக்கு ஜோடியாக நடித்த சுனைனா கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகையாக கொடி கட்டி பறந்தவர் தேவயானி. இவரது தம்பி நகுல். பாய்ஸ் படம் மூலமாக நடிகராக அறிமுகமான இவர், காதலில் விழுந்தேன் படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சுனைனா அறிமுகமானார்.
நகுலிடம் நான் பேச மாட்டேன்:
சுனைனா அந்த படத்தில் நகுலுடன் நடித்தது குறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். “நகுல் என்னை வெறுப்பேற்றவில்லை. அந்த படம் பண்ணும்போது நான் மிகவும் அமைதியாக இருந்தேன். நகுல் என்னிடம் வந்து பேசுவார், பேசுவார், பேசிக்கொண்டே இருப்பார். நான் பதில் பேசவே மாட்டேன். நகுல் அந்த கூச்சத்தை உடைக்க விரும்பினார். என்னை சகஜமாக பேச வைக்க விரும்பினார். ஆனால், அந்த 16, 17 வயதில் இருக்கும்போது சினிமாத்துறைக்கும் புதியதாக வந்த காரணத்தினால் நான் ரொம்ப கூச்சமாக இருந்தேன். எனக்கு தமிழும் தெரியாது. அதனால் பேசவும் ஒன்றுமில்லை”
இவ்வாறு அவர் பேசினார்.
நகுல் மீது குற்றச்சாட்டு:
நகுல் – சுனைனா ஜோடியாக நடித்து வெளியான காதலில் விழுந்தேன் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து, இருவரும் ஜோடியாக நடித்து மாசிலாமணி படம் வெளியானது. இந்த படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அப்போது இருவரும் காதலிப்பதாக கிசுகிசு வெளியானது. 2009ம் ஆண்டு ஜோடியாக நடித்த பிறகு இவர்கள் இருவரும் இணைந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை. சுனைனாவும் தமிழில் அதன் பிறகு ஏராளமான படங்களில் பலருக்கு ஜோடியாக நடித்தார்.
சமீபத்தில் நகுல் நடிப்பில் வாஸ்கோடா காமா என்ற படம் வெளியானது. இந்த படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனரிடம் நகுல் நள்ளிரவில் ஆணுறை வாங்கி வரச் சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும், அதன் காரணமாக அவரது சம்பளத்தை படத்தில் நகுல் குறைக்க வைத்துவிட்டார் என்றும் அந்த உதவி இயக்குனர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த சூழலில் நகுல் பற்றி சுனைனா பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என பல மொழிகளில் நடித்து வரும் சுனைனா தமிழில் கடைசியாக ரெஜினா என்ற படத்தில் நடித்தார். படங்கள் மட்டுமின்றி வெப்சீரிஸிலும் நடித்து வரும் சுனைனா இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற வெப்சீரிஸில் கடைசியாக நடித்துள்ளார்.