“க்ளாமர் ரசிக்கும்படி இருக்கணும்; எங்களுக்கு சொல்ல ஆள் இல்ல” - சில்க் வாழ்க்கை குறித்து ஷர்மிலி
பூ, நகை, பட்டுச்சேலை, கணவன், குழந்தைகள் இவைதான் சில்க் ஸ்மிதாவின் கனவு, ஆசை என்று கூறியுள்ளார் நடிகை ஷர்மிலி.
பூ, நகை, பட்டுச்சேலை, கணவன், குழந்தைகள் இவைதான் சில்க் ஸ்மிதாவின் கனவு, ஆசை என்று கூறியுள்ளார் நடிகை ஷர்மிலி.
1980 மற்றும் 90களில் கவர்ச்சி நடிகையாகவும், குணசித்திர நடிகையாகவும் நடித்தவர் நடிகை ஷர்மிலி. 13 வயதில் குரூப் டான்சராக அறிமுகமான இவர், பின் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் சிறு, சிறு வேடங்களில் நடிக்க துவங்கி அனைவராலும் கவனிக்கக் கூடிய நடிகையாக மாறினார்.
தற்போது திருமணமாகி குடும்பம் என்று செட்டிலாகிவிட்ட அவர், நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் நடிப்பேன் என்றும். சினிமா, சீரியலைவிட ரியாலிட்டி ஷோக்களின் மீது ஆசை அதிகமாக உள்ளது என்று கூறினார்.
அவர் அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நடிகை சில்க் ஸ்மிதா பற்றி நிறைய விஷயங்களைப் பேசியுள்ளார்.
நடிகை சில்க் ஸ்மிதா க்ளாமர் வேஷத்தில் நடித்தார். ஆனால் உண்மையில் அவருக்குக் குழந்தை முகம். அவருடன் டான்ஸராக நான் 30 படங்களுக்கும் மேல் நடித்திருப்பேன். அவர் என்னுடன் அன்பாகப் பழகுவார். என்னை ஃப்ரெண்ட் என்றார். நான் அவரை அக்கா என்று கூப்பிட்டால் அக்கான்னு கூப்பிடாதே நான் உன் ப்ரெண்ட் என்பார். நான் தயக்கத்துடன் சுமி என்பேன். அவர் அதை ரசிப்பார். அவர் என்னிடம் பேசிப் பழகுவதைப் பார்த்து எனக்கே ஆச்சரியமாக இருக்கும். செட்டில் ஹீரோக்களோடு எல்லாம் பேசமாட்டார். சூட்டிங் முடிந்ததும் என்னைப் போன்ற டான்ஸரிடம் வந்துவிடுவார். எங்களோடு கலகலவெனப் பேசுவார்.
அவர் ஒருமுறை என்னிடம், எனக்கு சேலை கட்டி நடிக்கவே ஆசை. ஆனால் இவர்கள் சிறு ட்ரெஸ் தான் தருகிறார்கள் என்றார். அவருக்கு பூ, நகை, பட்டுப்புடவை, கணவன், குழந்தைகளுடன் குடும்ப வாழ்க்கை மீதே ஆர்வம் அதிகம். ஆனால் அந்த ஆசைகள் நிறைவேறவில்லை. அடுத்த ஜென்மம் ஒன்று சில்குக்கு இருந்தால் அவர் விரும்பியது போல் வாழ்க்கை வாழ வேண்டும் என்று நான் வேண்டுகிறேன். சில்க் எப்போதும் கலகலவென தான் இருப்பார். ஆனால், தாய் தங்கை பாசம் படத்தில் நான் அவருக்கு தங்கையாக நடித்த போது அவரிடம் பெரிய மாற்றத்தைக் கண்டேன். யாரிடமும் பேசாமல், அமைதியாக, வருத்தமாக இருந்தார். அவருடன் அந்தப் படத்தில் நடித்ததிலிருந்து 3 மாதங்களில் அவர் இறந்துவிட்டார். அவர் மனதில் என்ன சோகம் இருந்தது என்பதை எனக்கு அந்த வயதில் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போது என்னுடைய வயதில் அவரும் இருந்திருந்தால் நிச்சயம் அவருக்கு ஆறுதலாக இருந்திருப்பேன்.
சில்க் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவரைப் போல் அழகு யாருமே கிடையாது. அவரை மாதிரி கிளாமர் பண்ண நிறைய பேர் வருகிறார்கள். ஆனால் ஆபாசத்தை காட்டிச் செல்கிறார்கள். இன்னிக்கு உங்களுக்கு பணம் முக்கியமாக இருக்கலாம், ஆனால் வாழ்க்கையில் நீங்கள் குடும்பம், குழந்தை என்று செட்டில் ஆன பிறகு உங்களுடைய படங்களைப் பார்த்து குழந்தைகள் ச்சை.. அம்மா இப்படி நடித்திருக்கிறாரே என்று சொல்லக்கூடாது. இப்போதெல்லாம் படித்துவிட்டு தான் சினிமாவுக்கு வருகிறார்கள். அதனால் பணத்தைவிட வாழ்க்கை முக்கியம் என்பதை உணர்ந்து க்ளாமர் செய்யுங்க. க்ளாமர் ரசிக்கும்படி இருக்கணும், முகம் சுழிக்கும்படி இருக்கக்கூடாது. எங்களுக்கு சொல்ல யாருமில்லை. உங்களுக்கு நாங்கள் சொல்கிறோம்” என்றார்.