Samantha: இட்லி, தோசை இல்ல.. சாயர்கிராட்: உடல் ஆரோக்கியத்துக்காக சமந்தா உண்ணும் முட்டைகோஸ் ரெசிபி!
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வரும் சமந்தா எடுத்துக் கொள்ளும் காலை உணவு என்ன தெரியுமா?
முட்டைகோஸை வைத்து செய்யப்படும் ’சாயர்க்ராட்’ (Sauerkraut) என்கிற ஐரோப்பிய உணவு வகையை தனது காலை உணவாக எடுத்துக் கொள்கிறார் சமந்தா.
சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து இடைவெளி எடுத்துக் கொள்வதாக அவர் கடந்த ஆண்டு அறிவித்தார். ஆன்மீகத் தலங்கள், உலக நாடுகளில் சுற்றுலா, சிகிச்சை, உடற்பயிற்சி என இந்த ஓராண்டுகாலம் சமந்தா தன்னை தயார்படுத்தி வந்துள்ளார். பாலிவுட்டில் அவர் நடித்துள்ள 'சிட்டடெல்' தொடர் விரைவில் அமேசான் பிரைமில் மே அல்லது ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது. இந்த ஆண்டோடு சினிமாவில் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
மையோசிட்டிஸ் என்னும் நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா, தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் மீண்டும் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக தனது ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். இப்படியான நிலையில் முன்னதாக மையோசிடிஸ் குறித்தும் தனது தனிப்பட்ட வாழ்க்கையைக் குறித்தும் சமந்தா பேசியிருந்தார்.
மேலும் தனது முன்னாள் கணவர் நாகசைத்யாவுடனான மணமுறிவு காலம் தனக்கு மிகுந்த சவாலானதாக இருந்ததாகவும் அவர் கூறியிருந்தார். அதன் தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் தனது காலை உணவு குறித்தும் அதன் மருத்துவப் பயன்களை குறித்தும் சமந்தா பேசியுள்ளார். ”ஏன் நீங்க இட்லி தோசை எல்லாம் சாப்பிட மாட்டீர்களா?’ என்று ரசிகர்கள் இந்த வீடியோவில் கமெண்ட் செய்ய தற்போது தனது காலை உணவு பற்றிய முழு விபரத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
சார்க்ராட் (Sauerkraut)
View this post on Instagram
முட்டை கோஸை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படும் சாயர்க்ராட் என்கிற ஐரோப்பிய உணவை சமந்தா தனது காலை உணவாக எடுத்துக் கொள்கிறார். உணவு செரிமானத்திற்கு தேவையான ப்ரோ பையோட்டிக் மற்றும் ப்ரீ பையோட்டிக் ஆகிய இருவகை பாக்டீரியாக்களும் இந்த உணவில் இருக்கின்றன.
நம் உடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை கொல்லவும், நச்சுத் தன்மைகளை அகற்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் ப்ரோ பயாட்டிக் உதவுகின்றன. அதே நேரத்தில் நாம் சாப்பிடும் உணவை நொதிக்கச் செய்து அதில் இருந்து ஊட்டச் சத்துக்களை எடுத்துக் கொள்ளவும் இந்த உணவு உதவியாக இருப்பதாக சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இட்லி மற்றும் தோசை போன்ற உணவுகளை சமைக்கும்போது இந்த அத்தியாவசிய பாக்டீரியாக்களின் தன்மை குறைந்துவிடுவதால் தான் இந்த உணவை எடுத்துக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.