Sai Pallavi | 'தமிழ்நாட்டு பொண்ணு நான்.. அதனால அப்படி' - திரைப்பட விழாவில் பேசிய சாய் பல்லவி!
தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “ஷியாம் சிங்கா ராய்”
தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் நானி நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் “ஷியாம் சிங்கா ராய்”. Niharika Entertainment சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கியுள்ளார். மறுபிறவியை மையமாக கொண்டு, இப்படத்தில், நானி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். சாய்பல்லவி, க்ரித்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளனர்.
தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள “ஷியாம் சிங்கா ராய்” படம் டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா, நானி, சமுத்திரகனி, சாய் பல்லவி, தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி உட்பட படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகை சாய் பல்லவி,
''எப்போதுமே நான் ஒரு கதையை படிக்கும்போது, மனதில் விஷுவல் தமிழில் தான் தெரியும், தமிழகத்தில் பிறந்து வளர்ந்ததால் அப்படி இருக்கலாம். பலதடவை இந்த கதைகள் தமிழில் வந்தால் நன்றாக இருக்கும் என்று தோணும், இந்த படக்கதை படிக்கும்போது, நம் மொழியில் எடுக்கலாமே என தோன்றியது. அப்போது தயாரிப்பாளர் நாலு மொழியில் எடுப்பதாக சொன்னார் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. தமிழ் படம் பார்க்கும் உணர்வை இந்த படம் தரும். இப்படத்தில் தேவதாசி பற்றி தெரிந்து கொள்வதற்காக, சில விஷயங்கள் கேட்டு தெரிந்து கொண்டேன், இயக்குநர் குழுவும் ஆராய்ச்சி செய்துள்ளார்கள், படத்திற்கு தேவையானதை செய்துள்ளோம். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்'' என்றார்.
முன்னதாக பேசிய சமுத்திரகனி, '' நானி என் தம்பி, ஒரு தமிழ் படத்தோடு அவர் வருவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு உதவி இயக்குனராக இருந்து படிப்படியாக உயர்ந்து, ஒரு சாம்ராஜ்யத்தை கட்டமைத்திருக்கிறார். அவர் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். நிமிர்ந்து நில் தெலுங்கு பதிப்பு நானி தான் செய்தார், 90 நாள் அவருடைய கடும் உழைப்பை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். ஒரு நல்ல விஷயம் கிடைத்தால் கடுமையாக உழைப்பவர் அவர். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தரும். சாய் பல்லவியின் தங்கையுடன் சமீபத்தில் தந்தையாக ஒரு படத்தி நடித்தேன் அவரும் எனக்கு மகள் போல தான். மிகச்சிறப்பான நடிகையாக வளர்ந்து வருகிறார் அவருக்கு வாழ்த்துகள். படம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றியை பெற வாழ்த்துக்கள் என்றார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்