Actress Roja: ஹீரோயின் செலக்ஷன்.. மணப்பெண் ஆன ரோஜா.. இந்த கதை தெரியுமா?
அப்பாவுக்கும் என்னை சினிமாவில் ஈடுபடுத்த விருப்பம் இருந்தது. அவர் இயக்குநராக ஆசைப்பட்டு அது நடக்கவில்லை. ஆனால் எங்க அம்மாவுக்கும், அண்ணனுக்கும் நான் சினிமாவில் நடிப்பது பிடிக்கவில்லை.

பிரபல இயக்குநரும், தனது கணவருமான ஆர்.கே.செல்வமணியை முதல்முறையாக சந்தித்த நிகழ்வை நடிகையும், அரசியல்வாதியுமான ரோஜா தெரிவித்ததைப் பற்றிக் காணலாம்.
கணவரை சந்தித்த தருணத்தை பகிர்ந்த ரோஜா
ஒரு நேர்காணலில் பேசிய நடிகையும், அரசியல்வாதியுமான ரோஜா, ‘1991ம் ஆண்டு வெளியான பிரேம தபசு படத்தின் இயக்குநரும், எனது அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். நான் படித்த காலேஜில் இருந்து நிறைய பேர் ஹீரோயின் ஆகியிருக்கிறார்கள். அப்படி ஒரு ஆல்பத்தில் என்னுடைய போட்டோவை பார்த்து விட்டு யார் இந்த பெண் கேட்டு பின் அப்பாவிடம் நடிக்க வைக்க அணுகினார்.
அப்பாவுக்கும் என்னை சினிமாவில் ஈடுபடுத்த விருப்பம் இருந்தது. அவர் இயக்குநராக ஆசைப்பட்டு அது நடக்கவில்லை. ஆனால் எங்க அம்மாவுக்கும், அண்ணனுக்கும் நான் சினிமாவில் நடிப்பது பிடிக்கவில்லை. ஒரு படம் பண்ணலாம் என சொல்லி நடிக்க வைத்தார்கள். அப்போது வந்த சினிமா பத்திரிக்கையில் என் புகைப்படம் பார்த்து ஆர்.கே.செல்வமணி செம்பருத்தி படத்துக்கு ஓகே பண்ணார். நாங்கள் அந்த நேரத்துக்கு ஆந்திராவில் இருந்து சென்னைக்கு போட்டோஷூட் செய்ய வந்திருந்தோம்.
நான் அவரை சந்திக்க சென்றபோது புடவை கட்டியிருந்தேன். பார்க்க பெரிய பெண் மாதிரி இருந்ததால் கதைக்கு சரியாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. எங்க அப்பா, அண்ணன் தான் அழைத்து வந்தார்கள். அதன்பிறகு பாவாடை தாவணி, ஃப்ராக் போட்டு போட்டோ, வீடியோ எடுத்து விட்டு அனுப்பி விட்டார்கள். அதன்பிறகு என்னை கிண்டல் செய்தார்கள். நீங்க அன்னைக்கு ஹீரோயினா வரல. ஏதோ பொண்ணு பார்க்க வந்த மாதிரி சேலையில வந்தீங்கன்னு சொல்வாங்க. என் வாழ்க்கை எங்கேயோ தொடங்கி எங்கேயோ போய்விட்டது என சொல்லலாம் என தெரிவித்தார்.
நடிகை ரோஜா சினிமா பயணம்
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரோஜா தமிழில் செம்பருத்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜூன், பிரபு, கார்த்திக், அஜித்குமார் என பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சினிமாவில் முழு வீச்சில் இயங்கவில்லை என்றாலும் ரோஜாவை தமிழ் சினிமா மறக்கவில்லை என்றே சொல்லலாம். நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் லெனின் பாண்டியன் என்ற படத்தில் நடித்தார்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த இப்படத்தில் கங்கை அமரன் ஜோடியாக நடித்திருந்தார். 12 வருடங்கள் கழித்து ரோஜா மீண்டும் சினிமாவில் நடித்ததை ரசிகர்கள் கொண்டாடினர். அதேசமயம் அரசியலில் தனக்கென தனியிடம் பிடித்திருக்கும் ரோஜா ஆந்திர மாநில அரசியலில் பிரதான கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸில் உள்ளார். நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ரோஜா, அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சராகவும் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.





















