Parvathi Thangalaan : கடவுளோடு பேசுவேன்.. தங்கலான் பார்வதி உடைத்த உண்மை..
Thangalaan Movie: தங்கலான் படத்தில் தனது கதாபாத்திரமான கங்கம்மாவாகவே தான் ஒவ்வொரு நாள் வாழ்ந்ததாக நடிகை பார்வதி திருவோத்து தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் (Thangalaan) படம் குறித்த தனது அனுபவங்களை முதல் முறையாக நடிகை பார்வதி திருவோத்து பகிர்ந்துள்ளார்.
தங்கலான்
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து உருவாகியுள்ள படம் தங்கலான். மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, பசுபதி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படமான தங்கலான் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. வரும் எப்ரல் மாதம் இந்தப் படம் திரைக்கு வரும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
நம்பிக்கையின் அடிப்படையில் தான் போனேன்!
தங்கலான் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை பார்வதி திருவோத்து நடித்துள்ளார். சமீபத்தில் மலையாள யூடியூப் சானலுக்கு அவர் அளித்த பேட்டியில் தங்கலான் படத்தைப் பற்றி பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
தங்கலான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு குறித்து அவர் பேசியபோது “பா.ரஞ்சித்திடம் இருந்து ஒரு நாள் எனக்கு அழைப்பு வந்தது. பல மாதங்களாக என்னை தொடர்புகொள்ள அவர் முயற்சித்ததாகக் கூறினார். பா ரஞ்சித்தின் ஃபோன் காலை உடனே எடுத்து பேசிவிடு என்று எல்லாரும் சொன்னார்கள். ஆனால் நான் ரஞ்சித்துடன் இதற்கு முன்பாக பேசியிருக்கிறேன். நாங்கள் இருவரும் இரண்டு படங்களுக்காக முன்பே பேசியிருக்கிறோம். ஆனால் அது ஒர்க் அவுட் ஆகவில்லை என்பதால் அவர் படத்தில் நடிக்க நான் காத்திருந்தேன்.
தங்கலான் படத்தின் கதையை ரஞ்சித் என்னிடம் சொன்னபோது முதலில் எனக்கு சரியாக புரியவில்லை. நானாக எதுவும் நினைத்து குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று நினைத்துக் கொண்டேன். ஏனென்றால் சில இயக்குநர்களின் மேல் எனக்கிருந்த நம்பிக்கையின் காரணத்தினால் மட்டுமே நான் அந்தப் படங்களில் நடித்திருக்கிறேன். அப்படியான ஒரு நம்பிக்கையில் தான் தங்கலான் படத்திற்குள் நான் நுழைந்தேன்” என்று பார்வதி கூறியுள்ளார்.
கங்கம்மாள் கதாபாத்திரம் பற்றி
“தங்கலான் படத்தில் நான் கங்கம்மாள் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கங்கம்மா 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெண். அந்தக் காலத்தில் வாழ்ந்த பெண்களைப் பற்றி பெரிதாக எதுவும் கேட்டதில்லை, ஏன் எதுவும் எழுதப்பட்டது கூட இல்லை. இந்த சவாலை எப்படி சமாளிப்பது எனக்கு தெரியவில்லை. எனவே ரஞ்சித் மற்றும் அவரது குழு சேர்ந்து நாங்கள் ஆராய்ச்சி செய்தோம்.
கங்கம்மா கதாபாத்திரத்திற்குள் நான் இவ்வளவு ஆழமாக செல்வேன் என்று எனக்கு தெரியாது. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புக்கு நான் கங்கம்மாவாக தான் செல்வேன். இந்த மொத்த உலகமும் எனக்கு ஆதரவாக நிற்பது போல் உணர்ந்தேன். கங்கம்மா கதாபாத்திரத்தை நியாயப்படுத்துவதிலும் அதற்கு மரியாதை செலுத்துவதிலும் தான் என்னுடைய முழுகவனமும் இருந்தது.
இந்த கதாபாத்திரத்தைப் பற்றி ரஞ்சித் என்னிடம் சொன்னபோது ‘கங்கம்மா ஒரு தாய். அதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீகள் என்பது உங்களைப் பொறுத்தது.’ என்று கூறினார். கங்கம்மாள் என்பவள் ஒரு மனித குழந்தைக்கு தாய் இல்லை, அவர் ஒரு வளர்ப்பு நாய்க்கு தான் தாய். ரஞ்சித்தின் உலகத்தில் இருக்கும் தாயாகவோ ஸ்கிரிப் பேப்பரில் இருக்கும் தாயாகவோ இல்லாமல் தாய் என்கிற வார்த்தைக்கு என்ன என்ன அர்த்தங்கள் இருக்குமோ அதற்குள் எல்லாம் இந்த கதாபாத்திரம் சென்று வந்துள்ளது. ” என்று பார்வதி கூறினார்
கடவுளோடு பேசுபவள்
மேலும். “கங்கம்மாள் என்பவள் வேற்றுலகத்தோடு தொடர்பில் இருப்பவள். அவளுக்கு கடவுளிடம் இருந்து செய்திகள் வரும். அது கிட்டதட்ட ஒரு மயக்க நிலை என்று ரஞ்சித் என்னிடம் சொன்னார். ஆனால் இப்படி மயக்க நிலையில் இருக்கும் யாரையும் நான் பார்த்ததில்லை. யூடியூபில் ஒரு சில ஆட்கள் இப்படி ட்ரான்ஸ் நிலையில் இருப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் அதை எப்படி செய்யப் போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை.
இயக்குநரும் அந்த கதாபாத்திரம் பற்றி அதிகமாக எனக்கு சொல்லவில்லை. எல்லாவற்றையும் விளக்கினால் கதாபாத்திரத்தின் தன்மை குறைந்துவிடும் என்று அவர் நினைத்தார். இதனால் இந்தக் கதாபாத்திரத்தை நாம் தான் சுமக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
மார்வெல் படங்களில் வருவது போல் இந்த கதாபாத்திரத்திற்கு பல்வேறு கதைகளை உருவாக்கினேன். ஆனால் அதுவும் இந்த கதாபாத்திரத்தின் தன்மையை குறைத்துவிடும் என்று நினைத்தேன். நான் உருவாக்கிய இந்த கதைகள் எல்லாம் ரஞ்சித்துக்கு தெரியாது. அவருக்கு என்னிடம் தேவைப்பட்டதோ அது எனது நடிப்பில் இருந்து வந்துவிடும் என்று நம்பினேன்” என்று பார்வதி கூறியுள்ளார்