“ராமராஜன் ஒரு வெகுளி; குழந்தைகளுக்காக இருவரும் பிரிந்தோம்” - நினைவலைகளை பகிர்ந்த நடிகை நளினி
1980களில் தென்னிந்திய திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர் நளினி. தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் மோகன்லால், மம்மூட்டி, விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் மோகன் ஆகியோருடன் நாயகியாக நடித்துள்ளார்.
1980களில் தென்னிந்திய திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர் நளினி. தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் மோகன்லால், மம்மூட்டி, விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் மோகன் ஆகியோருடன் நாயகியாக நடித்துள்ளார்.
நேர்த்தியான குடும்பப்பாங்கான அழகு, ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான நடிப்பு என்று தனக்கென தனி முத்திரை பதித்தவர் நளினி. அவ்வப்போது சீரியல்களில் நடிக்கிறார். சினிமாவில் உச்சத்தில் இருந்த காலத்தில் அவர் நடிகர் ராமராஜனை திருமணம் செய்து கொண்டார். நடிகர் ராமராஜனின் புகழும், பெயரும் இப்போது இருப்பவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார்களுக்கு சவால் விட்ட நடிகர். தொட்டதெல்லாம் ஹிட் என வாழ்ந்தவர். நடிகை நளினியும் அவரும் காதல் திருமணம் செய்து நல்லபடியாக வாழ்ந்தனர். இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னால் இருவருமே பிரிந்தனர்.
இந்நிலையில் தனது காதல், கல்யாணம், பிரிவு எல்லாவற்றையும் பற்றி நடிகை நளினி ஒரு சுவாரஸ்யப் பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர், "நானும் ராமராஜனும் ஓடிப்போய் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். சின்ன படங்கள் நடித்ததால், வெளியேற்றப்படுவோம் என்று நினைத்தேன். ஆனால், அது எல்லாமே ஹிட்டாகிக் கொண்டே இருந்தது. எனக்கு சினிமாவை விட, நல்ல குடும்பத்தலைவியாக இருக்க வேண்டும் என்பது தான் ஆசையாக இருந்தது. நான் அப்பெல்லாம் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கனும். லவ் பண்ணா கல்யாணம் ஆயிடும். அப்புறம் நடிக்க வேண்டாம் என்று தான் நினைப்பில் இருந்தேன். எனக்கு நடிக்க வேண்டும் என்கிற ஆசையே இல்லை. நான் படுபிஸியாக நடித்துக் கொண்டிருந்தபோது ராமராஜன் உதவி இயக்குநராக இருந்தார். நான் நடித்த 18 படங்களில் உதவி இயக்குனராக இருந்தார்.
மனைவி சொல்லே மந்திரம் படப்பிடிப்பில் ஒரு சீனுக்காக கன்டினூட்டி பார்த்து எனக்கு நெற்றியில் குங்குமம் வைத்தார். அப்போதே அவருக்கு மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் பறந்திருக்கு. ஒன் சைடாவே என்னை காதலிச்சார். அப்புறம் அப்பப்போ எனக்கு லவ் லெட்டர் கொடுத்தார். எனக்கு ஒரே ஆச்சரியம். நமக்காக லெட்டர் கொடுத்ததும், அதை பெரிதாக நினைத்தேன். எனது அசிஸ்டன்ட் கிட்ட கெஞ்சிக் கேட்டு அந்த லெட்டரை வாங்கிப் படிப்பேன். நம்ம ஊரு நல்ல ஊரு படத்தில் அவர் ஹீரோவாக அறிமுகமானார். ஒய்எம்சிஏவில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது ராமராஜன் என்னைப் பார்த்து காதலைச் சொன்னார். அதை வீட்டில் உடனே யாரோ சொல்ல, வீட்டில் இருந்து வந்து ராமராஜனை அடித்துவிட்டார்கள். அப்போது எனக்கு அவர் மீது பரிதாபம் வந்தது. உடனே என்னை கேரளா கூட்டிச் சென்றுவிட்டார்கள். 1986 முழுவதும் கேரளாவில் இருந்தேன். 1987ல் பாலைவன ரோஜாக்கள் படப்பிடிப்புக்காக சென்னை வந்தேன். அப்போது விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒரு வருடம் கழித்து அன்று தான் அவரைப் பார்த்தேன். மீண்டும் காதல் மலர்ந்தது. அப்படியே காதல் வளர்ந்து ஓடிப்போய் கல்யாணம் பண்ணோம். அப்புறம் எம்ஜிஆர் ஐயாகிட்ட போய் சரணடைந்தோம். அவர் தான் எங்களை வளர்மதி அக்கா வீட்டுக்கு அனுப்பினார்கள். அவர் தான் எங்களுக்கு ரிசப்ஷன் நடத்தினார்.
எங்கள் வாழ்க்கை இனிமையாகத் தான் இருந்தது. ராமராஜன், நன்றாக ஜோதிடம் பார்ப்பார். கல்யாணம் ஆகி 4 ஆண்டுகளில் அவர் பெண்ணும், பையனும் பிறந்தா நாம சேர்ந்திருக்க மாட்டோம். அவங்களை ஹாஸ்டலில் சேர்த்துவிடுவோம். நாம தனியா இருப்போம்.
இல்லையென்றால், போக போக என்னோடு புகழ் போயிடும் என்று அவரே கணித்தார். அதெல்லாம் ஒன்னும் ஆகாதுங்க...என்று நான் தான் சமரசம் செய்தேன். இல்லம்மா... நம்ம ஜாதகம் அப்படி தான் இருக்கு, என்றார். ஒரு கட்டத்தில், நான் வேண்டுமா, குழந்தைகள் வேண்டுமா எனக்கேட்டார். எனக்கு குழந்தைகள் தான் வேண்டும் என்று கூறி பிரிந்து விட்டோம். ஆனால், எங்கள் பிரிவை அவர் முன்பே கணித்து வைத்திருந்தார். அவர் கூறியது தான் நடந்தது. ராமராஜன் ரொம்ப வெகுளி. நல்ல மனிதர். இருந்தாலும் நாங்கள் பிரிந்துவிட்டோம்” என்றார்.