Vettaiyan: "டபுள் சந்தோஷம்" வேட்டையன் படத்தில் என்ன கேரக்டர்? மனம் திறந்த மஞ்சுவாரியர்!
ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் என்னவென்று நடிகை மஞ்சுவாரியர் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகை மஞ்சுவாரியர் வேட்டையன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது குறித்து ஏற்கனவே தனது பேட்டி ஒன்றில் உறுதி செய்திருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வேட்டையன் படம் குறித்து பேசியுள்ளார்.
மனம் திறந்த மஞ்சுவாரியர்:
அதில் அவர் கூறியிருப்பதாவது, “ வேட்டையன் படத்தில் ரஜினி சாரின் மனைவியாக நடித்துள்ளேன். என் கதாபாத்திரத்தின் பெயர் தாரா. இந்த படத்தில் நான் V லாக்கராக நடித்துள்ளேன். எனக்கு வேட்டையன் படத்தில் முக்கியமான கதாபாத்திரம். ஞானேவேல் என்னிடம் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ரஜினி சாரின் படத்தில் அவருடன் நடிக்கப்போகிறேன் என நினைக்கும்போது டபுள் மகிழ்ச்சியாக இருந்தது” என்று அவர் கூறினார்.
வேட்டையன் படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, 46 வயதிலும் மஞ்சுவாரியரின் நடன அசைவுகளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது இணையத்தையும், இன்ஸ்டாகிராமையும் மனசிலாயோ பாடல் கலக்கி வருகிறது.
அக்டோபர் 10 ரிலீஸ்:
வேட்டையன் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் காவல்துறை உயர் அதிகாரியாக நடித்துள்ளார். ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குனர் ஞானவேல் இந்த படத்தை இயக்குவதால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாக உள்ளது.
தமிழிலும் வரவேற்பு:
வெற்றி மாறனின் அசுரன் படம் மூலமாக தமிழில் அறிமுகமானார் மஞ்சுவாரியர். மலையாளத்தில் பிரபல நடிகையாக உலா வரும் இவருக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தனுஷிற்கு ஜோடியாக அசுரனில் நடித்த மஞ்சுவாரியர், துணிவு படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருப்பார். தற்போது ரஜினிகாந்திற்கு ஜோடியாக வேட்டையன் படத்தில் நடிக்கிறார். தமிழில் நடித்துள்ள 3 படங்களிலுமே மிகப்பெரிய நடிகர்களுடன் இவர் நடித்திருப்பது பெரிய வரவேற்பை இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.