Lakshmi Ramakrishnan: “அபிராமி சொன்னது முட்டாள்தனமான விஷயம்” - கலாஷேத்ரா விவகாரத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் விமர்சனம்
கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகை பிக்பாஸ் அபிராமியை, நடிகையும் இயக்குநருமான லட்சுமி சரமாரியாக விமர்சித்துள்ளார்.
கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகை பிக்பாஸ் அபிராமியை, நடிகையும் இயக்குநருமான லட்சுமி சரமாரியாக விமர்சித்துள்ளார்.
கலாஷேத்ரா விவகாரம்
சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ராவில் இயங்கி வரும் நுண்கலை கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக முன்னாள் மாணவி ஒருவர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரின் பேரில் கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மாணவிகளும் போராட்டத்தில் இறங்கியதால் இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக சொல்லப்படும் ஹரிபத்மன் உள்ளிட்ட 4 பேராசிரியர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இதற்கிடையில் ஹரிபத்மன் மனைவி திவ்யாவும், தன் கணவர் சிக்கிய விவகாரத்தில் அரசியல் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
சப்போர்ட் செய்த அபிராமி
இந்த நிலையில் பிக்பாஸ் மூலம் ரசிகர்களிடம் புகழ்பெற்ற நடிகை அபிராமி சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நான் கலாஷேத்ராவின் முன்னாள் மாணவி. அப்போது இதுபோல் சம்பவங்கள் நடந்ததில்லை என கூறி ஆசிரியர் ஹரி பத்மனுக்கு சப்போர்ட் செய்தார். அங்குள்ள சில ஆசிரியர்கள் பெயரை குறிப்பிட்டு அவர்கள் தான் மாணவிகளை தூண்டி பிரச்சினை செய்வதாக தெரிவித்தார்.
அப்போது கலாஷேத்ரா என்ற பெயரை உச்சரிக்க தெரியாதவர்கள் கூட அந்த கல்லூரியைப் பற்றி பேசியதாக சொல்ல, அபிராமி பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில் நடிகை குட்டி பத்மினி அபிராமி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, பதிலுக்கு அபிராமியும் பேச சமூக வலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
லட்சுமி ராமகிருஷ்ணன் விமர்சனம்
இந்நிலையில் நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில், அபிராமியை சரமாரியாக விமர்சித்தார். அவர் தனது உரையில், “அபிராமி ஒரு பெண்ணாக இருந்து கொண்டு அங்கு இத்தனை குழந்தைகள் போராட்டம் பண்ணும்போது ஆசிரியர் ஹரி பத்மனுக்கு நான் கேரண்டி என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனமான விஷயம். அவர் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு நடந்து கொண்டார் என நினைக்கிறேன்.
இதுக்கெல்லாம் என்ன ஆதாரமா கொடுக்க முடியும். ஒரு பெண் குழந்தை வந்து ஸ்கூல்ல அழுத்தம் இருக்குன்னு சொல்றப்ப, என்ன நடந்தது என்று அந்தக் குழந்தைக்கு மட்டும்தான் தெரியும். அபிராமி இது என்னோட பள்ளி, என்னோட ஆசிரியர்ன்னு அந்த பக்கம் என்ன நடக்கிறதுன்னு தெரியாம பேசுறாங்க. இது ரொம்ப தவறான விஷயம்.
ஒரு பெண்ணுக்கு,குழந்தைக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத சமூகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அதை நாம் தான் மாற்ற வேண்டும்” என லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.