HBD Devayani: தித்திக்கும் தேவயானி... தினந்தோறும் தேவைதான் நீ...! தங்கம் ஊத்தி செஞ்ச பொன் மயிலுக்கு பிறந்தநாள்!
கமலி என்ற கதாபாத்திரத்தில் 'காதல் கோட்டை' படத்தில் நடித்த தேவயானியின் நடிப்பை அத்தனை எளிதில் தமிழ் ரசிகர்களால் மறந்து விட முடியாது.
ஹோம்லி நடிகைகளின் வரிசையில் ஒருவராக தமிழ் சினிமா ரசிகர்களால் ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட ஒரு கியூட் நடிகை தேவயானி. அவரின் கொஞ்சல் பேச்சு தான் 90'ஸ் கிட்ஸ்களின் பேவரட்டாக இருந்தது. ஒரு ஹீரோயின் போல இல்லாமல் நம்ம பக்கத்துக்கு வீடு பொண்ணு என்ற பீல் கொடுக்கும் இந்த காதல் கோட்டை கமலிக்கு இன்று 49வது பிறந்தநாள்.
மும்பையில் பிறந்த தேவயானி, பெங்காலி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ஹிந்தி மற்றும் மலையாள படங்களிலும் வாய்ப்பு பெற்றவர் தமிழில் நடிகர் பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத் ஜோடியாக 'தொட்டாசிணுங்கி' படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்ததாக கல்லூரி வாசல் படத்தில் நடித்த தேவயானி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
தேவயானியின் திரைப்பயணத்தை ஒரு அர்த்தமுள்ள பயணமாக மாற்றியது இயக்குனர் அகத்தியனின் 'காதல் கோட்டை' திரைப்படம். கமலி என்ற கதாபாத்திரத்தில் நடித்த தேவயானியின் நடிப்பை அத்தனை எளிதில் தமிழ் ரசிகர்களால் மறந்து விட முடியாது. சினிமாவில் பார்க்காமல் காதல் என்ற புதிய கான்செப்டை கொண்டு வந்த இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஏராளமான விருதுகளை பெற்றார். காதல் கோட்டை படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் கோட்டையை கட்டிய தேவயானி அதன் தொடர்ச்சியாக ஏராளமான படங்களில் கமிட்டாகி குடும்ப குத்துவிளக்காக நடித்தார்.
ரேவதி, நதியா போன்ற நாயகிகளின் வழியில் கவர்ச்சி காட்டாத ஒரு நடிகையாக தனக்கேற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து வெற்றி நாயகியாக வலம் வந்தார். 90'ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த அனைவரின் ஜோடியாகவும் நடித்தவர் தேவயானி. பூமணி, சூர்யவம்சம், நினைத்தேன் வந்தாய், தொடரும், மூவேந்தர், மறுமலர்ச்சி, அப்பு, தெனாலி, ஆனந்தம், பிரெண்ட்ஸ், பஞ்சதந்திரம் என ஏராளமான ஹிட் படங்களில் நடித்து இருந்தார்.
முன்னணி நடிகையாக இருந்த தேவயானி திடீரென குடும்பத்தை எதிர்த்து இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து சின்னத்திரையில் கவனம் செலுத்தி வந்தார். சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் மெகா தொடரான 'கோலங்கள்' சீரியலின் கதாநாயகியாக தேவயானி நடித்திருந்தார். சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார். இன்றும் சீரியல்களில் நடித்து வரும் தேவயானிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இன்று பிறந்தநாள் காணும் தேவயானிக்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.