Deepa Shankar: சாமி கூட கேட்டால் தான் வரம் கொடுக்கும்; நான் கேட்காமலேயே உதவி செய்த சாமி மயில்சாமி: தீபா சங்கர்!
தனது மகனுக்கு உடம்பு சரியில்லாததை அறிந்து கொண்டு நான் கேட்காமலேயே எனக்கு போன் செய்து மயில்சாமி பண உதவி செய்தார் என்று நடிகை தீபா சங்கர் கூறியுள்ளார்.
எம்ஜிஆரைப் போன்று வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டு, அவரைப் போன்று ஏராளமான உதவிகளை செய்தவர் மறைந்த காமெடி நடிகர் மயில்சாமி. ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்க வேண்டும் என்ற எம்ஜிஆரின் பாடலை வேத வாக்காக கொண்டு வாழ்ந்தார் என்று ஒரு மேடை நிகழ்ச்சியில் மயில்சாமி பற்றி நடிகர் விவேக் கூறியிருக்கிறார். தன்னிடம் இருந்தால் எல்லோரிடமும் கொடுத்துவிடுவார். அதன் பிறகு அவருடைய செலவுக்கு காசு கேட்பார் என்று விவேக் கூறி இருந்தார்.
அப்படி ஒரு பறந்த உள்ளம் கொண்டவர் தான் மறைந்த நடிகர் மயில்சாமி. இப்போது அவரைப் பற்றி நடிகை தீபா சங்கரும் ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட மெட்டி ஒலி சீரியல் மூலமாக அறிமுகமாகவர் நடிகை தீபா. இந்த தொடருக்கு பிறகு தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நடித்து வந்த தீபா சங்கருக்கு மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
கிராமத்து தோற்றம், வெகுளியான பேச்சு ஆகியவற்றின் மூலமாக தனக்கென்று ரசிகர்களை உருவாக்கிக் கொண்டார். ஆனால், டான்ஸில் சக்கரவத்தி. எல்லோராலயும் தீபா அக்கா தீபா அக்கா என்று அழைக்கப்படுகிறார். சினிமாவில் மாயாண்டி குடும்பத்தார் படத்தில் ஆரம்பித்து வெடிகுண்டு முருகேசன், கிடாரி, செம்ம, கடைக்குட்டி சிங்கம், சங்கத்தமிழன், பொன் ஒன்று கண்டேன், நின்னு விளையாடு, டாக்டர், இந்தியன் 2, ராஜாகிளி என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
ஒரு வருடத்தில் 7க்கும் அதிகமான படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு திரைக்கு வந்த ராஜாகிளி படத்தில் தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டியிருந்தார். கடைசியாக இவரது நடிப்பில் உருவான மெட்ராஸ்காரன் படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். டாப் குக்கூ டூப் குக்கூ முதல் சீசனில் டூப் குக்காக கலந்து கொண்டார். இந்த நிலையில் தான் மாயாண்டி குடும்பத்தார் படத்தில் மயில்சாமியுடன் இணைந்து நடித்ததைத் தொடர்ந்து அவர் செய்த மறக்க முடியாத சம்பவத்தை பற்றி பேசியிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: நானும் மயில்சாமியும் மாயாண்டி குடும்பத்தார் நடித்தோம். அப்போது என்னுடைய மகனுக்கு இதயத்தில் பிரச்சனை வந்தது. அதைப் பற்றி அவருக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. உடனே எனக்கு போன் போட்டு என்ன ஆச்சு, ஃபையனுக்கு உடம்பு சரியில்லையாம், எவ்வளவு பணம் தேவைப்படும் என்று தான் கேட்டார். இதைக் கேட்டு எனக்கு அதிர்ச்சியாகியிருச்சு. இந்த காலத்தில் உறவினராக இருந்தாலும் சரி, நண்பர்களாக இருந்தாலும் சரி யாரும் கேட்டா கூட காசு பணம் தர மாட்டாங்க. இவ்வளவு ஏன், சாமிகிட்டயே கேட்டால் தான் வரம் கொடுக்கும். ஆனால், என்னைப் பொறுத்த வரையில் நான் கேட்காமல் எனக்கு வரம் கொடுத்த சாமி மயில்சாமி தான் என்று பெருமையாக பேசியிருக்கிறார்.
விவேக், வடிவேல் ஆகியோருடன் இணைந்து ஏராளமான காமெடி காட்சிகளில் நடித்து பிஸியான நடிகராக வலம் வந்த காமெடி நடிகர் மயில்சாமி கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். இவர் தீவிரமான சிவன் பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது.