Bhavana Birthday: மீண்டுவந்த ஃபீனிக்ஸ்.. மீண்டும் கொண்டாடிய பிறந்தநாள்.. வாழ்த்துக்கள் பாவனா
நடிகை பாவனா நேற்று தனது 37 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்
சினிமா பயணம்
கேரள மாநிலம் த்ரிஷுரில் பிறந்தவர் பாவனா. தனது ஐந்து வயதிலிருந்தே நடிப்பின் மீது பயங்கர ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். ’எண்டே சூரியப்புத்திரிக்கு’ என்கிற மலையாளத் திரைப்படத்தில் நடித்த அமலாவின் நடிப்பைப் பார்த்து ஈர்க்கப்பட்ட பாவனா கண்ணாடி முன் நின்று அமலாவைப் போலவே நடித்துப் பார்ப்பாராம். மேலும் அந்த படத்தில் அமலா மாடியில் இருந்து குதித்து தனது கையை உடைத்துக் கொள்வதுபோல் நடித்து பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார் பாவனா என்ற தகவலும் உண்டு. தனது 16 வயதில் மலையாளத்தில் ’நம்மல்’ என்கிற படத்தின் மூலம் சினிமா உலகத்திற்கு அறிமுகமானார் பாவனா.
2006 ஆம் ஆண்டு இயக்குனர் மிஸ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் பாவனா. மலையாளத்தைப் போலவே தமிழிலும் சிறப்பான வரவேறபைப் பெற்றார் பாவனா.
பாலியல் துன்புறுத்தல்
கடந்த 2017 ஆம் ஆண்டு படபிடிப்பு முடிந்து திரும்பிக்கொண்டிருந்த பாவனா அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்த குற்றத்திற்குப் பின் மலையாளத் திரைப்பட நடிகர் திலீப் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்து காவல்துறை அவரை கைது செய்தது. திலீப் தனது மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டை கடுமையாக மறுத்து வந்தார். மூன்று மாத சிறை தண்டனைக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார் திலீப்.
பாவனா எதிர்கொண்ட சவால்கள்
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஒருவரின் அடையாளத்தை எந்த நிலையிலும் வெளியிடக்கூடாது என்கிறது இந்தியச் சட்டம். ஆனால் கடத்தப்பட்ட நாளில் இருந்தே தொலைக்காட்சி ஊடகங்களில் பாவனாவின் பெயர் குறிப்பிடப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான செய்தி வெளியான பின்பே அவரது பெயர் ஊடகங்களில் இருந்து நீக்கப்பட்டது.
“எல்லோரையும் போல் மகிழ்ச்சியாக வாழ ஆசைப்பட்ட ஒரு சாதாரணப் பெண்ணாக நான் இருந்தேன். ஆனால் ஒரு நிகழ்வால் என் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிட்டது. நான் சமூக வலைதளங்களில் பதிவிடும் புகைப்படங்களைக் கண்டு நான் மகிழ்ச்சியாக இருப்பதாக அனைவரும் நம்புகிறார்கள். ஆனால் இந்த நிகழ்வில் இருந்து மீண்டுவர நான் நரகம்வரை சென்று மீண்டு வந்துள்ளேன்” – பாவனா
ஒரு நடிகை தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார் என்று ஒருவரின் மீது குற்றச்சாட்டு வைத்தால் தன் தரப்பில் நியாயம் இருப்பினும் அவர் எத்தகைய கேள்விகளை எதிர்கொள்ள நேரலாம் ?
முதல் கேள்வி கடத்தப்பட்ட நேரம் இரவு ஏழு மணி. ஏழு மணிக்கு ஒரு நடிகை எதற்காக வெளியே செல்ல வேண்டும் என்று பாவனாவிடம் கேட்கப்பட்டது. இந்த ஒட்டுமொத்த நிகழ்வும் பாவனா உருவாக்கிய கட்டுக்கதை என அவரை விமர்சித்தனர் சிலர்.
நான் ஒரு போராளி
இந்த கேள்விகளை எல்லாம் எதிர்கொண்டு தனக்கு நிகழ்ந்த அநீதியை மீண்டும் தன் நினைவில் கொண்டுவந்து ஒவ்வொரு சின்னத் தகவலையும் நீதிமன்றத்தில் கூறி, இது பற்றி பேசும் துணிவு பாவனாவிற்கு வருவதற்கு கிட்டதட்ட ஐந்து ஆண்டுகாலம் தேவைப்பட்டது.
”எனக்கு நிகழ்த்தப்பட்ட அநீதியின் பேரால் கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னுடைய அடையாளத்தை நான் மறுக்க வேண்டிய சூழலுக்கு நான் தள்ளப்பட்டிருக்கிறேன். பாதிக்கப்பட்டவர் என்கிற நிலையில் இருந்து மீண்டு இப்போது ஒரு போராளியாக நான் நிற்கும் இந்தப் பயணம் எனக்கு எளிதானதாக இருக்கவில்லை” என்றார். இந்தப் போராளிக்கு பிறந்தநாள் நேற்று. பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாவனா.