Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் மருத்துவ சிகிச்சைக்கு நடிகர் சிம்பு மற்றும் பாலா நிதியுதவி செய்ததைத் தொடர்ந்து தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி செய்துள்ளார்.
கை கால் செயலிழந்த நிலையில் வீடியோ வெளியிட்ட வெங்கல் ராவ்
சண்டைக்கலைஞராக சினிமாவில் கால்பதித்தவர் வெங்கல் ராவ் (Vengal Rao), சண்டைக்காட்சியின் போது ஒரு விபத்தில் சிக்கினார். 25 ஆண்டுகள் சண்டைக் கலைஞராக இருந்த வெங்கல் ராவ் நகைச்சுவை நடிகராக நடிக்க வடிவேலுவிடம் உதவி கேட்டார். இதனைத் தொடர்ந்து வடிவேலு படங்கள் என்றாலே வெங்கல் ராவைப் பார்க்கலாம்.
தமிழ், தெலுங்கு படங்களில் பணியாற்றத் தொடங்கிய இவர், வடிவேலுவுடன் இணைந்து காமெடி நடிகராக மிகவும் பிரபலமானார். வடிவேலுவுடன் இணைந்து இவர் நடித்த கந்தசாமி படத்தில் இடம்பெற்ற தேங்காய் காமெடி, தலைநகரம் படத்தில் இடம்பெற்ற சிறையில் நடக்கும் காமெடி, வடிவேலு இவர் தலையில் கையை வைத்து படாதபாடுபடும் காமெடி என்று வடிவேலுவுடன் இவர் இணைந்து நடித்த அனைத்து நகைச்சுவைக் காட்சிகளும் மிகவும் பிரபலம்.
இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு முதல் வெங்கல் ராவ் சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வருகிறார். முதலில் விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால் விஜயவாடாவிலேயே சிகிச்சைப் பெற்று வந்தார் வெங்கல் ராவ். இந்நிலையில் தனது கை கால் செயலிழந்துவிட்டதாகக் கூறி தனது மருத்துவ சிகிச்சைக்காக உதவி கேட்டு வீடியோ வெளியிட்டிருந்தார் வெங்கல் ராவ். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
உதவிக்கரம் நீட்டிய நட்சத்திரங்கள்
வெங்கல் ராவின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியதைத் தொடர்ந்து தமிழ் திரையுலகினர் அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். கடந்த சில நாட்கள் முன்பு நடிகர் சிலம்பரசன் வெங்கல் ராவின் மருத்துவ செலவிற்கு ரூ .2 லட்சம் நிதியுதவி வழங்கினார். சிம்புவைத் தொடர்ந்து நடிகர் பாலா வெங்கல் ராவிற்கு ஒரு லட்சம் ரூபாய் அனுப்பி இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் இன்று (ஜூன் 26) வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “எனக்கு மிகவும் பிடித்த நடிகர் வெங்கல் ராவ் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் செய்தி அறிந்தேன். அதனால் அவருக்கு என்னுடைய சொந்த பணத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளேன். அவரது அக்கவுண்ட் எண் எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கிறது. அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் அந்த எண்ணுக்கு நீங்களும் பணம் அனுப்ப முடிந்தால் அனுப்புங்கள். அவர் மருத்துவ செலவிற்கு பயண்படுத்திக் கொள்வார்” என்று பகிர்ந்திருந்தார்.
25 ஆயிரம் வழங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்
இவர்களைத் தொடர்ந்து தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெங்கல் ராவின் மருத்துவ சிகிச்சைக்காக 25 ஆயிரம் நிதியுதவி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திரையில் ரசிகர்களை மகிழ்வித்த நடிகர் வெங்கல் ராவிற்கு நட்சத்திரங்கள் உதவ முன்வந்துள்ளது ரசிகர்களால் பாராட்டப்படுகிறது.