20 years of Pithamagan: சித்தனாக கலக்கிய விக்ரம்.. காமெடியில் அசத்திய சூர்யா.. “பிதாமகன்” வெளியான நாள் இன்று..!
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உள்ள பாலாவின் இயக்கத்தில் உருவான “பிதாமகன்” படம் வெளியாகி இன்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைகிறது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உள்ள பாலாவின் இயக்கத்தில் உருவான “பிதாமகன்” படம் வெளியாகி இன்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைகிறது.
பாலாவுடன் கூட்டணி சேர்ந்த விக்ரம் - சூர்யா
சேது படத்தின் மூலம் விக்ரமுக்கும், நந்தா படத்தின் மூலம் சூர்யாவுக்கும் திருப்புமுனை ஏற்படுத்தி கொடுத்தவர் இயக்குநர் பாலா. இவரின் 3வது படமாக உருவானது “பிதாமகன்”. இளையராஜா இசையமைத்த இப்படத்தில் சங்கீதா, லைலா, மனோபாலா, மகாதேவன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பிதாமகன் படம் ஜெயகாந்தனின் நந்தவனத்தில் ஒரு ஆண்டி என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
படத்தின் கதை
இடுகாட்டில் குழந்தையை பெற்றெடுத்து விட்டு பெண் ஒருவர் இறந்து விடுகிறார். அந்த குழந்தையை இடுகாடு பராமரிப்பாளர் வளர்க்கிறார். அதுதான் விக்ரம். மனிதத் தொடர்பே பெரிதும் இல்லாமல் வளரும் அவர், வெளித்தோற்றத்தில் மிருகத்தைப் போன்றவர். ஒரு காலத்துக்குப் பின், உணவைத் தேடி நகரத்துக்குள் வரும் விக்ரம் பிரச்சினையில் ஈடுபடுகிறார். அவரை காப்பாற்றி அழைத்து செல்லும் போதைப்பொருள் வியாபாரியான சங்கீதா கஞ்சா பிசினஸ் செய்பவரான மகாதேவனிடம் வேலைக்கு சேர்த்து விடுகிறார். வெளியுலகம் தெரியாத விக்ரம் கஞ்சா கடத்தும் போது போலீசாரால் கைது செய்யப்படுகிறார்.
இதற்கிடையில் லைலாவிடம் பிராடுத்தனம் பண்ணி ஜெயிலுக்கு வரும் சங்கீதாவின் தம்பியான சூர்யாவுக்கு விக்ரம் மேல் அனுதாபம் ஏற்பட அவரை தன்னுடனே வைத்து கொள்கிறார். சூர்யாவின் குருட்டுத்தனமான அன்புக்கு விக்ரம் தன்னை அர்ப்பணிக்கிறார். சிறையில் இருந்து வெளியே வரும் சூர்யா, மகாதேவன் தன் குற்றங்களுக்கு விக்ரமை பயன்படுத்துவதை கண்டு பிரச்சினை செய்கிறார். இரு கட்டத்தில் மகாதேவனுக்கு எதிராக விக்ரமை கொண்டு நிறுத்துவதன் விளைவாக சூர்யா கொலை செய்யப்படுகிறார். இதன்மூலம் மரணத்தின் அர்த்தத்தையும், நேசிப்பவரை இழப்பதன் வலியும் விக்ரமுக்கு புரிய வருகிறது. இறுதியாக மகாதேவனை பழிவாங்குவதே இப்படத்தின் கதையாகும்.
பிற தகவல்கள்
இந்த படத்தில் முதலில் சங்கீதா கேரக்டரில் நடிக்க விஜயசாந்தி, மாளவிகா, காயத்ரி ஜெயராம் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் தமிழில் சில படங்களில் நடித்த ரசிகாவை சங்கீதா என பெயர் மாற்றி நடிக்க வைத்தார் பாலா. அதேபோல் பழைய பாடல்களை எல்லாம் கலந்து பாடல் ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. இதற்கு நடிகை சிம்ரன் நடனமாடியிருந்தார். இளையராஜா தன் பங்குக்கு படத்திற்கு வலுசேர்த்திருந்தார்.
மேலும் பிதாமகன் படத்தில் நடித்ததற்காக நடிகர் விக்ரமுக்கு முதல் முறையாக தேசிய விருது, மாநில அரசின் விருதுகள் கிடைத்தது. இப்படம் பல திரைப்பட விழாவிலும் விருதுகளை குவித்தது. பிதாமகன் படம் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: 20 Years of Thirumalai: ஆக்ஷன் ஹீரோ அவதாரம்.. கெட்டப்பை மாற்றிய விஜய்.. 20 ஆண்டுகளை நிறைவு செய்யும் “திருமலை”