Vishnu Manchu: அசைக்க முடியாத சிவபக்தர்... பிரம்மாண்டமாக உருவாகும் விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா - ஒரு உண்மையான இந்திய காவியக் கதை’
கண்ணப்பாவின் பக்தியை பிரமாண்டமான திரைக்காவியமாக மக்களுக்கு கொடுக்கும் முயற்சியில், நடிகர் விஷ்ணு மஞ்சு கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படம் ‘கண்ணப்பா - ஒரு உண்மையான இந்திய காவியக் கதை’ திரைப்பட ஷூட்டிங் தொடங்கியது.
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர்களுள் ஒருவரான விஷ்ணு மஞ்சுவின் நீண்டநாள் கனவான ‘கண்ணப்பா - ஒரு உண்மையான இந்திய காவியக் கதை’ திரைப்படம், இன்று ஸ்ரீ காளஹஸ்திரி கோவிலில் பூஜையுடன் தொடங்கியது.
சிவபெருமானின் அசைக்க முடியாத பக்தரான கண்ணப்பாவின் பக்தியை பிரமாண்டமான திரைக்காவியமாக மக்களுக்கு கொடுக்கும் முயற்சியில், நடிகர் விஷ்ணு மஞ்சு கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். கண்ணப்பாவின் வாழ்க்கை மற்றும் அவருடைய பக்தியின் மகிமை குறித்து பல ஆச்சரியமான மற்றும் அதிசய தகவல்களை சேகரித்த விஷ்ணு மஞ்சு, அவற்றைக் கொண்டு பிரமாண்டமான பான் இந்திய திரைப்படத்தை கொடுப்பதற்கான வேலையைத் தொடங்கியுள்ளார்.
24 ஃபிரேம்ஸ் ஃபேக்டரி மற்றும் ஏவிஏ என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர். மோகன் பாபு தயாரிப்பில் மிகப்பெரிய பொருட் செலவில் பிரமாண்டமான காவியமாக உருவாகும் இப்படத்தில் கண்ணப்பா வேடத்தில் விஷ்ணு மஞ்சு நடிக்கிறார். கதையின் நாயகியாக நுபுர் சனோன் நடிக்கிறார். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள்.
பிரபல எழுத்தாளர்கள் பருச்சுரி கோபாலகிருஷ்ணா, தோட்டா பிரசாத், தோட்டப்பள்லி சாய்நாத், புர்ரா சாய் மாதவ் ஆகியோர் இப்படத்தின் கதையை எழுதியுள்ளனர். மணிசர்மா மற்றும் ஸ்டீபன் தேவஸ்ஸே இசையமைக்கின்றனர். ஷெல்டன் ஷா ஒளிப்பதிவு செய்ய, சின்னா கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘மகாபாரதம்’ தொடரை இயக்கிய முகேஷ் சிங் ‘கண்ணப்பா - ஒரு உண்மையான இந்திய காவியக் கதை’ திரைப்படத்தை இயக்குகிறார்.
இந்திய சினிமாவின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டும் இன்றி ஹாலிவுட் சினிமாவின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றும் இப்படம், உலக மக்களையும் கவரும் வகையில் பிரமாண்டமான படைப்பாக உருவாக உள்ளது.
இப்படம் குறித்து கூறிய நடிகர் விஷ்ணு மஞ்சு, “மிகுந்த உற்சாகத்துடனும் பெருமிதத்துடனும் எனது நேசத்துக்குரிய படைப்பான ‘கண்ணப்பா - ஒரு உண்மையான இந்திய காவியக் கதை’ படத்தை தொடங்கியிருக்கிறேன். இந்தத் திரைப்படம் தலைசிறந்த படைப்பாகவும், அன்பின் உழைப்பாகவும் பல ஆண்டுகளாக கவனமாக வளர்க்கப்பட்டது. ‘கண்ணப்பாவின்’ ஆழமான கதை பல தலைமுறைகளாக சினிமா ரசிகர்களின் இதயங்களில் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது. சிவபெருமானின் அசைக்க முடியாத பக்தரான கண்ணப்பாவின் காலத்தால் அழியாத சரித்திரம், காலங்காலமாக ஆழ்ந்த பயபக்தியை பெற்றுள்ளது.
இந்தப் படம் என்னுடைய அடங்காத ஆர்வத்துக்கு சான்றாக நிற்கிறது. இது பல்வேறு இந்தியத் திரைப்படத் தொழில்களில் இருந்து புகழ்பெற்ற நடிகர்களைக் கொண்டு, பெரிய அளவில் வெளிவரும் வகையில் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்திய சினிமாவில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட முயற்சிகளில் ஒன்றாக இருக்கும்.
அசைக்க முடியாத பக்தி மற்றும் அதன் மகத்துவத்தின் வெளிச்சத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இந்த கதையில், கண்ணப்பாவின் பிரமிக்க வைக்கும் மாற்றமும் அடங்கியுள்ளது. ஆரம்பத்தில் நாத்திகராக இருந்தவர், ஆழ்ந்த உருமாற்றத்திற்கு உட்பட்டு சிவபெருமானின் உறுதியான பக்தராக மாறினார். அவரது பக்தி தற்கால மற்றும் கலாச்சார எல்லைகளில் எதிரொலிப்பதோடு, வரலாற்றின் மிகவும் விதிவிலக்கான பக்தர்களில் ஒருவராக அவரது அந்தஸ்தை உறுதிப்படுத்துகிறது. இந்த அசாதாரண பாரம்பரியத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது எனக்கு பெருமையாக இருப்பதோடு, அதை என் பாக்கியமாகவும் கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.