Vishal: “வண்டியை எல்லாம் வித்துட்டேன்.. சைக்கிள் மட்டும் தான் இருக்கு” - விஷாலுக்கு என்ன ஆச்சு?
என்னிடம் வண்டி இல்லை. எல்லாவற்றையும் விற்று விட்டு சைக்கிள் வாங்கி விட்டேன். அப்பா,அம்மா வெளியே செல்ல மட்டும் வண்டி உள்ளது.
என்னிடம் உள்ள வாகனங்களை எல்லாம் நான் விற்றுவிட்டேன் என நேர்காணல் ஒன்றில் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது நடிகர் விஷால் சைக்கிளில் சென்று வாக்களித்தார். முன்னதாக நடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் சைக்கிளில் சென்று ஓட்டு போட்டார். இதனால் விஷாலும் அவரை பின்பற்றி இப்படி செய்ததாக விமர்சனம் செய்யப்பட்டது. தொடர்ந்து பிப்ரவரி மாதம் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலுக்கு வருவதாக தெரிவித்தார். கடந்த வாரம் விஷால் தானும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
இப்படியான நிலையில் ரத்னம் பட பிரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஷாலிடம், “விஜய்யை பின்பற்றி ஒவ்வொன்றாக செய்கிறீர்களே?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ”உங்களைப் போல விஜய் எனக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன் தான். ஆனால் சைக்கிளில் சென்று ஓட்டுப்போட்டதற்கு காரணம் அது அல்ல. என்னிடம் வண்டி இல்லை. எல்லாவற்றையும் விற்று விட்டு சைக்கிள் வாங்கி விட்டேன். அப்பா,அம்மா வெளியே செல்ல மட்டும் வண்டி உள்ளது. இன்றைக்கு சாலை இருக்கும் நிலைமையில் வண்டியை அடிக்கடி மாற்ற முடியாது என விட்டு விட்டேன்" என தெரிவித்திருந்தார்.
இதனிடையே நேர்காணல் ஒன்றில் பங்கேற்றிருந்த நடிகர் விஷால், “ரத்னம் படத்துக்காக 14 வருடங்களுக்கு முன்னாடி இருந்த சண்டகோழி, தாமிரபரணி படத்தில் இருந்த விஷால் வேண்டும் என இயக்குநர் ஹரி சொன்னார். சரி பண்ணி விடலாம் என சொன்னேன். எத்தனை மாசம் வேண்டும் என கேட்டார். நான் 3 அல்லது 4 வாரங்கள் கொடுங்கள் என சொன்னேன். அதனை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு செயல்பட்டேன். ஒவ்வொரு இயக்குநர் ஒரு ஒரு விதமாக கேட்பார்கள். அதற்கேற்றாற்போல் மாற வேண்டும் என்பது தான் நம்முடைய சவாலாக இருக்க வேண்டும். அப்படியே தான் இருப்பேன், சிஜியில் சரி பார்த்து கொள்ளுங்கள் என இருக்க மாட்டேன்.
ஆனால் 60 சதவிகிதம் டயட் மற்றும் 40 சதவிகிதம் பிட்னெஸ் என 3 முதல் 4 வாரங்கள் கடுமையாக உழைத்தேன். வாகனங்களை விற்றுவிட்டேன். ஷூட்டிங்கிற்கு சென்றாலும் சைக்கிளில் சென்றேன். 28 நாட்கள் கழித்து ஹரி முன்னாடி போய் நின்னேன். அவர் ஆச்சரியப்பட்டு போனார்” என விஷால் தெரிவித்துள்ளார்.
ரத்னம் படம்
தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ஹரி - நடிகர் விஷால் 3வது முறையாக “ரத்னம்” படத்தில் இணைந்துள்ளனர். நாளை (ஏப்ரல் 26) இப்படம் வெளியாகும் நிலையில், இதில் பிரியா பவானி ஷங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடித்திருக்க, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.