25 Years of Priyamudan: அஜித் நடிக்க ஆசைப்பட்ட விஜய் படம்.. 25 ஆண்டுகளை நிறைவு செய்த ‘பிரியமுடன்’...!
தான் புகழ் பெற தொடங்கிய சமயத்தில் நடிகர் விஜய் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த படம் தான் பிரியமுடன். இந்தப் படம் விஜய்க்கு 19 ஆவது படமாகும்.
ஒரு காலத்தில் ஹீரோக்கள் எல்லோரும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க தயங்கினார்கள். ஆனால் தான் புகழ் பெற தொடங்கிய சமயத்தில் நடிகர் விஜய் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த படம் தான் பிரியமுடன். இந்தப் படம் விஜய்க்கு 19 ஆவது படமாகும். 1998 ஆம் ஆண்டு வெளியான இப்படம் இன்றோடு 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
விஜய்யின் வித்தியாசமான முடிவு
திரைப்படக் கல்லூரி மாணவரான வின்சென்ட் செல்வா மண்ணில் இந்த காதல் என்ற ஒரு குறும்படத்தை இயக்கி கோலிவுட்டில் வரவேற்பை பெற்றிருந்தார். அதன் மூலம் நடிகர் விஜயை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க தனது குறும்படத்தை போட்டு காட்டியுள்ளார். அது அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. இதைத் தொடர்ந்து செல்வாவிடம் கதை கேட்க விஜய் ஒப்புக்கொண்டார். ஆனால் வின்சென்ட் செல்வாவோ தனக்கு கதை சொல்லத் தெரியாது என்றும் இடைவேளை வரை கதை சொல்கிறேன் பிடித்திருந்தால் கண்டிப்பாக படம் பண்ண வாய்ப்பு தர வேண்டும் என கண்டிஷனோடு கதை சொல்லியுள்ளார்.
கிட்டத்தட்ட முழு கதையும் சொல்லிவிட்டேன். அந்தக் கதையில் ஒரு பாசிட்டிவ் கேரக்டர் ஒரு நெகட்டிவ் கேரக்டர் இருக்கும் விஜய்க்கு அந்த நெகட்டிவ் கேரக்டரை பண்ண வேண்டும் என்ற ஆசை இருந்தது.
ஆனால் பூவே உனக்காக மற்றும் காதலுக்கு மரியாதை படங்கள் மூலம் ஃபேமிலி ஆடியன்ஸ் ஆதரவை பெற்ற விஜய் இந்த நேரத்தில் இப்படியான நெகட்டிவ் ரோலில் நடித்தால் சரியாக இருக்காது என அவரது அப்பாவும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகரும் அம்மா சோபாவும் மறுக்கிறார்கள். ஆனால் விஜய் பிடிவாதமாக நான் இந்த படத்தை கண்டிப்பாக பண்ண வேண்டும் என கூறியுள்ளார். அந்த சமயம் அவர் ஏழு படங்களில் நடிக்க கமிட் ஆகி இருந்தார். ஆனால் எல்லாவற்றிற்கும் முன்பாக பிரியமுடன் படத்தில் நடித்து முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
அதோடு யார் இந்த படத்தை தயாரிக்கிறார்களோ அவர்களுக்காக நான் மேலும் ஒரு படம் நடித்துக் கொடுக்கிறேன் எனவும் உறுதியளித்திருந்தார். பிரியமுடன் படத்தின் கிளைமாக்ஸ் இல் விஜய் சாவது போன்று காட்சி இடம்பெற்று இருந்தது. இதற்கு எஸ்ஏ சந்திரசேகர் சம்மதிக்கவே இல்லை. ஆனால் என்னுடைய கேரியரில் இப்படி ஒரு படம் இருக்க வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருந்தார்.
கதை சுருக்கம்
வசந்த்தாக விஜய்யும், வசந்த குமாராக சுஜித் சாகர் என்பவரும் இந்தப் படத்தில் நண்பர்களாக நடித்திருப்பார்கள். விஜய்க்கு கௌசல்யாவை பார்த்தவுடன் காதல் பிறந்து விடும். ஒரு விதத்தில் கவுசல்யாவுக்கு வசந்தகுமார் இரத்தம் கொடுத்து உதவியிருப்பார். ஆனால் அவருக்கோ ரத்தம் கொடுத்தது வசந்த் என்ற பெயர் மட்டும்தான் தெரிந்திருக்கும். இதனை பயன்படுத்தி தான் அந்த வசந்த் என விஜய் சொல்லி, இருவரும் காதலிப்பார்கள். தன்னுடைய காதலுக்காக விஜய் சில கொலைகளையும் செய்வார். இதிலிருந்து தப்பித்து விஜய் நினைத்தபடி கௌசல்யாவை கரம் பிடித்தாரா என்பதை பிரியமுடன் படத்தின் கதை ஆகும்.
“பிரியமுடன் விஜய்”
முதலில் இந்த படத்தில் ஹீரோயின் கேரக்டருக்கு நடிகை மீனாவை தான் அணுகி இருக்கிறார்கள். ஆனால் அவர் பிசியாக இருக்கவே நேருக்கு நேர் படத்தில் விஜயுடன் ஜோடி சேர்ந்த கௌசல்யா ஒப்பந்தமானார். இந்த படத்தில் மூன்று முக்கியமான காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.தேவாவின் இசையில் ஒயிட் லகான் கோழி, பூஜா வா, பாரதிக்கு கண்ணம்மா ஆகிய பாடல்கள் இன்றும் ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் முக்கியமான இடம் பெற்றுள்ளது. இந்த படம் தெலுங்கு, கன்னடா, இந்தி, சிங்களம் ஆகிய 4 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
பிரியமுடன் படத்தில் நடிப்பதற்கு முன்னால் நடிகர் விஜய் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போடும் போது வித் லவ் விஜய் என எழுதுவது வழக்கம். இந்தப் படத்துக்கு பின்னால் அவரின் கையெழுத்தில் பிரியமுடன் விஜய் என்ன மாற்றம் கண்டது. அதுவே அவருக்கு பொருந்தியும் போனது.
ஒரு பேட்டியில் இந்த படத்தை பார்த்துவிட்டு அஜித் தன்னை பாராட்டியதாக வின்சென்ட் செல்வா கூறியிருந்தார். மேலும் இந்த படம் நான் பண்ணியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். 25 ஆண்டுகள் ஆனாலும் தமிழ் சினிமாவின் நெகட்டிவ் ஹீரோ தொடர்பான படங்களில் பிரியமுடன் படத்துக்கு மிக முக்கியமான இடம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.