Vijay Antony: ராகுகாலம் எமகண்டம் எல்லாம் எனக்கு கிடையாது - நடிகர் விஜய் ஆண்டனி அதிரடி
ராகு காலம் , எமகண்டம் என்று எல்லாம் தனக்கு சினிமாவில் செண்டிமெண்ட் கிடையாது என்று நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்
விஜய் ஆண்டனி
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து பின் நடிப்பிற்கு திரும்பியவர் விஜய் ஆண்டனி. நான் படத்தில் நடிகராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தொடர்ச்சியாக பல்வேறு கதைக்களங்களில் நடித்து வருகிறார். பிச்சைக்காரன் , சலீம் , உள்ளிட்ட படங்கள் நல்ல வெற்றியையும் கொடுத்தன. விஜய் ஆண்டனி படம் என்றாலே கொஞ்சம் வித்தியாசமான டைட்டில்களை எதிர்பார்க்கலாம். அந்த வகையில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படத்திற்கு மழை பிடிக்காத மனிதன் என்று டைட்டில் வைக்கப் பட்டுள்ளது.
மழை பிடிக்காத மனிதன்
கோலிசோடா , பத்து என்றதுக்குள்ள உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் மில்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். மேகா ஆகாஷ், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். விறுவிறுப்பான த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியது. டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு விஜய் ஆண்டனி முகத்தில் கரியுடன் தற்போது தான் நடித்து வரும் படத்தின் மேக் அப் எடுக்காமலே கலந்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஆண்டனி தனக்கு சினிமாவில் நல்ல நேரம் கெட்ட நேரம் என்று செண்டிமெண்ட் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளராக வந்திருக்கலாம்
நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஆண்டனி “விஜய் மில்டனை எனக்கு கடந்த 20 ஆண்டுகளாக தெரியும். விஜய் மில்டன் மட்டும் திரைப்படங்களை இயக்காமல் ஒளிப்பதிவு மட்டும் செய்திருந்தார் என்றால் இந்தியாவிலேயே சிறந்த ஒளிப்பதிவாளராக வந்திருப்பார். அவரது கோயம்பேடு என்கிற கதையில் நான் நடிப்பதாக இருந்தது, ஆனால் இந்தப் படம் நடக்கவில்லை. என்னுடைய கரியரில் நான் நடித்த மிகப்பெரிய படமாக மழை பிடிக்காத மனிதன் படத்தை பார்க்கிறேன். “ என்று கூறினார் விஜய் ஆண்டனி.
எனக்கு செண்டிமெண்ட் கிடையாது
தனது படங்களின் டைட்டில் எப்போது வித்தியாசமாக இருப்பதும் இனி வரக்கூடிய படங்களில் அவரது படங்களின் டைட்டில் எப்படி இருக்கும் என்கிற கேள்விக்கு பதிலளித்த விஜய் ஆண்டனி “ எனக்கு சினிமாவில் செண்டிமெண்ட் கிடையாது. ராகு காலம் என்பது கெட்ட நேரம் என்றால் அந்த நேரத்தில் கூட நான் படத்தை ஆரம்பித்து காட்டுகிறேன். ராகுகாலம் , எமகண்டம் என்கிற பெயரில் கூட நான் படம் பண்ன தயார். இனிவரக்கூடிய என் படங்களின் டைட்டிலுமே கரடுமுரடாக தான் இருக்கும்” என்று விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.