(Source: ECI/ABP News/ABP Majha)
Vidharth| ’நடக்கவே தெரியல நடிக்க வந்துட்டன்னு சொன்னாங்க...’ -நடிகர் விதார்த் ஓப்பன் அப்!
நடித்தால் கதாநாயகன்தான் என்றில்லாமல் காற்றின் மொழி படத்தில் ஜோதிகாவின் கணவர் , கொடி வீரன் படத்தில் வில்லன் , வீரம் படத்தில் அஜித் தம்பி....
கதாநாயகன் என்பதைத்தாண்டி , கதையின் நாயகனாக படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகர் விதார்த். கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான மின்னலே திரைப்படத்தில் மாதவனின் நண்பர்கள் குழுவின் ஒருவராக அறிமுகமானார் விதார்த். வந்தது ஒரு சில காட்சிகளில் மிக சிறிய ரோல் என்றாலும் அதுவே தன்னை ஒரு நடிகன் என உணர உதவியாக இருந்தது என்கிறார். தமிழில் இருபத்து ஐந்து படங்களுக்கு மேல் நடித்த விதார்த் , மற்ற நடிகர்களை போலத்தான் ஜூனியர் ஆர்டிஸ்டாக இருந்து தனது பயணத்தை தொடங்கியிருக்கிறார்.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் இருந்த நட்பை பயன்படுத்தி சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுத்தார். அந்த படத்தில் மாதவனுக்கும் இவருக்குமான காட்சி ஒன்றில் , ஒரே சிகெரெட்டை இருவரும் பறிமாறிக்கொள்ளும் காட்சி ஒன்றை ஆங்கிலத்தில் விளக்கியிருக்கிறார். இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன். அது என்ன என்பது புரியாமல் இருந்த விதார்த்திற்க்கு மாதவன் விளக்கினாராம் . அதன் பின்னர் “நடிக்க வந்துட்டல்ல ...இங்க்லீஷ் கத்துக்கோ “ என்றாராம் மாதவன். அவர் சொல்லியது ஒன்றும் தவறில்லை .ஆனால் எனக்கு அப்போ ” தமிழ் படம்தானே பண்ணுறீங்க..தமிழ்ல பேசுங்களேன் “ என தோன்றியது. நடிகனாக இருந்தால் மொழி கற்றுக்கொள்வது அவசியம்தான் . என்கிறார் விதார்த். மின்னலே படத்திற்கு பிறகு முழுமையாக சினிமாவை தேர்வு செய்த விதார்த் , அதன் பிறகு கூத்துப்பட்டறையில் இணைந்து தனது நடிப்பு பயணத்தை துவங்கியிருக்கிறார்.
விதார்த் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு நடித்தால் கதாநாயகன்தான் என்றில்லாமல் காற்றின் மொழி படத்தில் ஜோதிகாவின் கணவர் , கொடி வீரன் படத்தில் வில்லன் , வீரம் படத்தில் அஜித் தம்பி என சில குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்த பொழுது அந்த படத்தில் சில காரணங்களால் விதார்த்தால் நடிக்க முடியவில்லை. உடனே கூத்துப்பட்டறை நண்பரான நடிகர் தினேஷை பரிந்துரை செய்ய ,ஆனால் அந்த வாய்ப்பு ஒளிப்பதிவாளர் மூலம் சக நண்பரான விஜய் சேதுபதிக்கு கிடைத்தது என்கிறார்.
வாழ்க்கையின் ஒவ்வொரு ஆரம்பமும் எல்லோருக்கும் அவமானமாகத்தான் இருக்கும். அப்படியான அவமானங்களை சந்தித்தால்தான் நாம் வளர முடியும் என கூறும் விதார்த், ‛ ஒழுங்கா நடக்கவே தெரியல உனக்கு , முதல்ல ஒழுங்கா நட...உனக்கெல்லாம் சேரன் சார் மாதிரியான ஆள் பொற்காலம் படம் எடுத்தால்தான் சரியா இருக்கும்னு,’ சொன்னாங்க என்கிறார். எல்லா துறையிலையும் அவமானம் இருக்கும் , அதல்லாம் கடந்துதான் வரனும் என வாழ்க்கையை புரிந்தவராய் , எதையும் எளிதாக கடக்கும் மனிதராக காணப்படுகிறார் விதார்த்.