Vadivelu About CM Stalin : ‘10 முறை.. பிரமாதம், பிரமாதம்னு முதலமைச்சர் சொன்னாரு..’ : நெகிழ்ந்த வடிவேலு..
மாமன்னன் படத்தை பார்த்து விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டிய நிகழ்வை, அந்த படத்தின் வெற்றி விழாவில் நடிகர் வடிவேலு நினைவு கூர்ந்தார்.
மாமன்னன் படத்தை பார்த்து விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டிய நிகழ்வை, அந்த படத்தின் வெற்றி விழாவில் நடிகர் வடிவேலு நினைவு கூர்ந்தார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலரும் நடித்த படம் ‘மாமன்னன்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் கடந்த ஜூன் 29 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படியான நிலையில் மாமன்னன் படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
எனக்கு இப்படி ஒரு சோதனை வந்துருக்கு
இந்நிகழ்ச்சியில் பேசிய வடிவேலு, ”எல்லோருக்கும் வணக்கம். இவ்வளவு நாளா ஒரு காமெடி நடிகராக நடிச்சிட்டு இருந்தேன். ஒரு சில படத்துல குணச்சித்திர கேரக்டரும் பண்ணிருந்தேன். ஆனால்நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2 படம் கமிட்டான பிறகு வேற மாதிரி கதை பண்ணலாம்ன்னு நினைக்கிறப்ப இந்த மாமன்னன் கதை அமைஞ்சிது. உதயநிதி எனக்கு போன் பண்ணி இந்த கதையை கேளுங்க என சொன்னார். மாரி செல்வராஜ் படத்தை பாருங்கன்னு சொன்னாரு. நான் அன்னைக்கு 2 படத்தையும் பார்த்தேன். மாரி வந்து என்கிட்ட ஒன்லைன் சொன்னதும் பிடிச்சி போச்சு. எனக்கு நடிக்கிற வாய்ப்பு இந்த கதையில அமைஞ்சிது. காமெடியே இருக்காது.
உடனே உதயநிதிகிட்ட கேட்டேன். அவரோ நடக்கும்போது கூட காமெடி இருக்கக்கூடாது என சொன்னார். எனக்கு ஒரு மாதிரி ஷாக்கா இருந்துச்சு. கீர்த்தி கிட்ட ‘எனக்கு இப்படி ஒரு சோதனை வந்துருக்கு’ என சொன்னேன். பின்னர் மாரி எனக்கு முழு கதையை சொன்னதும் சந்தோஷமா இருந்துச்சு. நிஜமாலுமே மாமன்னன் யார் என்றால் இயக்குநர் மாரி செல்வராஜ் தான். உதயநிதி மன்னாதி மன்னன், நான் குறுநில மன்னன்.
இந்த படத்தில் நடித்த நடிகர்கள் எல்லாம் சிறந்த கலைஞர்கள். ஒரு 25, 30 படம் பண்ண அனுபவம் மாரி செல்வராஜூக்கு இருக்கிறதை நான் பார்த்தேன். அவரை உன்னிப்பாக கவனித்து தான் சொல்கிறேன். வாழ்க்கையில் கஷ்டப்பட்டு வந்தவரு அவரு. நானும் அப்படித்தான் வந்தேன். கஷ்டப்பட்டு தானே வந்த..பின்ன ஏன் சம்பளம் கேட்குறன்னு கேட்பாங்க.. அதுக்கு நான் பதில் சொல்ல விரும்பல..
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
மாரி செல்வராஜின் வலி உண்மையிலேயே பெரியது. அதனுடன் மற்றவர்களின் வலியும் எளிதாக கனெக்ட் ஆச்சு. நாங்க ஷூட்டிங்கில் காமெடியா இருந்தாலும் மாரி செம சீரியஸா இருப்பாரு. எங்களுக்கு ரொம்ப ஒத்துழைப்பா இருந்தது ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் தான். ஒரு காட்சியில் பகத் பாசில் காரில் இருப்பாரு. நான் துப்பாக்கி எடுத்து காட்டணும். ‘எல்லோரும் செட்டப்போடு தான் வந்துருக்கீங்கலா?’ என டயலாக் வரும்.
அப்ப உதயநிதி ஒரு துப்பாக்கி எடுப்பாரு. எனக்கோ காமெடியா டயலாக் வருது. கொஞ்சம் விட்டா அந்த சீன் அவுட். இதேமாதிரி நாங்க வீட்டோட முன் கதவை பூட்டிக் கொண்டு துப்பாக்கி மற்றும் வாளோட உட்காந்து இருப்போம். டேக் போய்கிட்டு இருக்கு. என்னிடம் உதயநிதி, ‘அப்பா.. ஒருவேளை முன்னாடி கதவை உடைச்சிட்டு வந்தா.. பின்பக்கமாக ஓட கதவு தொறந்து இருக்கா’ என கேட்க, மாரி செல்வராஜ் குழம்பி விட்டார்.
அதேமாதிரி சேர் சண்டை காட்சியில் உதய் சட்டைப்பை கிழிஞ்சிருக்கும். நான் அதை பார்க்குற மாதிரி காட்சிகள் இருக்கும். ஷாட் முடிஞ்சதும் தேனி ஈஸ்வர் வந்து சொல்லுங்கன்னே, ‘சண்டைன்னா சட்டை கிழியத்தான் செய்யும்ன்னு’ என கூறிவிட்டு செல்கிறார். இப்படி மாமன்னன் படத்தின் கொஞ்சம் புரட்டி போட்டால் காமெடியாக மாறிவிடும்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் பார்த்து விட்டு இரவு 11 மணிக்கு போன் பண்ணி 10 முறை பிரமாதம்..பிரமாதம் என சொல்லி நடிப்பை பாராட்டினார். ரஜினி, கமல் என அனைவரும் பாராட்டினார்கள்