9 Years of Eli: படுகுழியில் தள்ளிய வடிவேலு படம் .. 8 ஆண்டுகளுக்குப் பின் மீண்ட இயக்குநர்!
எலி படத்தில் வடிவேலு ஜோடியாக சதா நடித்திருந்தார். எலி படம் தோல்வியடைந்த நிலையில் 8 ஆண்டுகளாக யுவராஜ் தயாளன் எந்த படமும் இயக்காமல் இருந்தார்.
நடிகர் வடிவேலு நடித்த “எலி” படம் வெளியாகி இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த படம் அப்படத்தின் இயக்குநர் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனையை பற்றி பார்க்கலாம்.
காமெடியில் ஜாம்பவானாக வலம் வந்த வடிவேலு இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் மூலம் ஹீரோவாக மாறினார். அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. தொடர்ந்து இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் நடித்தார். அப்படம் தோல்வியடைந்தது. இதற்கிடையில் அரசியலுக்குள் சென்றதால் வடிவேலுவுக்கு சினிமாவில் வாய்ப்பு இல்லாமலே போனது. இந்த நிலையில் தான் வடிவேலு நடிக்க “தெனாலி ராமன்” படம் வெளியானது. குழந்தைகளை இப்படம் கவர்ந்தாலும் பெரிய வெற்றியைப் பெறவில்லை.
தெனாலி ராமன் படத்தை யுவராஜ் தயாளன் இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் அவர் வடிவேலுவை வைத்து இயக்கிய படம் தான் “எலி”. படத்தின் டைட்டிலும், வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் வடிவேலுவின் கெட்டப்பும் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. ஆனால் இந்த படம் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் தோல்வியடைந்தது. இப்படத்தில் வடிவேலு ஜோடியாக சதா நடித்திருந்தார். எலி படம் தோல்வியடைந்த நிலையில் 8 ஆண்டுகளாக யுவராஜ் தயாளன் எந்த படமும் இயக்காமல் இருந்தார்.
கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற “இறுகப்பற்று” படத்தின் மூலம் தான் பிடிக்க நினைத்த இடத்தை யுவராஜ் தயாளன் பிடித்துள்ளார். அவர் தான் முந்தைய படங்களை இயக்கினார் என்பதை பலராலும் நம்ப முடியவில்லை. ஆனால் எலி படம் கொடுத்த தோல்வி தான் தன் வாழ்க்கையில் மறக்க முடியாது என நேர்காணல் ஒன்றில் யுவராஜ் தெரிவித்திருந்தார்.
எலி படத்தின் சிறப்பு காட்சி பிரசாத் லேப்பில் பத்திரிக்கையாளர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டுள்ளது. படம் முடிந்த பிறகு அரங்கின் உள்ளே அமைதியான சூழல் நிலவியுள்ளது. வடிவேலு யுவராஜ் மூலம் படம் எப்படி இருக்கிறது என கேட்க சொல்லியுள்ளார். அப்படி அவர் கேட்டும் பதில் வராமல் அமைதியே நிலவியுள்ளது. அந்த மயான அமைதி படம் நல்லா இல்லை என்பதை புரிய வைத்தது. அங்கிருந்து வடிவேலுவுடன் காரில் கிளம்பிய யுவராஜ் தயாளன் சிறிது தூரத்தில் இறங்கியுள்ளார். அங்கிருந்து கிளம்பியவர் அடுத்த 8 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தலை காட்டவே இல்லை. அந்த மயான அமைதி யுவராஜை தூங்க விடாமல் செய்துள்ளது. எலி படம் தோல்வி தான் இறுகப்பற்று என்னும் பிளாக்பஸ்டர் படத்தை யுவராஜால் கொடுக்க வைத்தது.