Rajinikanth: ஷூட்டிங்கில் 5 மணி நேரம் காத்திருந்த ரஜினிகாந்த்.. ஆச்சரியப்பட்ட பிரபல நடிகர்.. என்ன நடந்தது?
படப்பிடிப்பில் தனது காட்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் 5 மணி நேரம் காத்திருந்ததாக நடிகர் சுப்பு பஞ்சு தெரிவித்துள்ள தகவல் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

படப்பிடிப்பில் தனது காட்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் 5 மணி நேரம் காத்திருந்ததாக நடிகர் சுப்பு பஞ்சு தெரிவித்துள்ள தகவல் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் மிக முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் பஞ்சு அருணாச்சலம். இவருடைய மகன் சுப்பு பஞ்சு. 2008ல் வெளியான சரோஜா படத்தில் அறிமுகமானாலும், கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். முன்னதாக 1998 ஆம் ஆண்டு மலையாளத்தில் மறைந்த நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தனின் “டெய்சி” படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியிருந்தார். அதன் பின்னர் தனது தந்தையின் தயாரிப்பு நிறுவனமான பி. ஏ. ஆர்ட் புரொடொக்சன்ஸில் வேலை செய்து வந்தார்.
இதனிடையே சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவரிடம் ரஜினி மற்றும் கமல் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு சிறு வயதில் இருந்தே வீட்டில் ஒருவராக அவர்களை பார்த்து வளர்ந்ததால் என்னால் அவர்களை பிரமிப்பான ஒருவராக பார்க்க முடியவில்லை. ஆனால் இருவரிடமும் கத்துக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருந்துச்சு.
View this post on Instagram
குறிப்பாக "ரஜினியிடம் தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்கிற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் இருப்பது எனக்கு ரொம்ப பிடிச்சது. நான் வீரா மற்றும் குரு சிஷ்யன் படங்களின் படப்பிடிப்பின் போது இதை நேரடியாகவே பார்த்தேன். சொல்லப்போனால் ரஜினியுடனான பயணத்தில் ஒரு மிகப்பெரிய அனுபவம் கிடைத்தது. வீரா படத்தின் பிளாஸ்பேக் காட்சிகளுக்காக ராஜமுந்திரி அருகே படகில் சென்றடையும் ஒரு கிராமத்தில் தான் ஷூட்டிங் நடந்தது.
இதற்காக ஒருநாள் காலையில் 7 மணிக்கே ரஜினி முதல் படகில் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று விட்டார். ஆனால் திட்டமிடலில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக காலையில் எடுக்கப்பட வேண்டிய காட்சியில் நடிக்க வேண்டியவர் வரவில்லை. உடனே இயக்குநர் சுரேஷ் கிருஷணா ரஜினி இல்லாத காட்சிகளை எடுத்து விடலாம் என முடிவு செய்து அவரிடம் சென்று சொல்கிறார். அதற்கு ரஜினி எந்தவித டென்ஷனும் இல்லாமல் ஒன்றும் பிரச்சினையில்லை. தாராளமாக எடுங்கள் என சொல்லி விட்டு ஒரு சேரை எடுத்துக் கொண்டு மரத்தின் அடியில் சென்று முகத்தில் துணியைப் போட்டு தூங்கி விட்டார்.
அதன்பிறகு 12 மணிக்கு தான் அவருக்கான காட்சிகள் எடுக்கப்பட்டது. பின்னர் மாலையில் நான் ரஜினியிடம் சென்று இனி இந்த மாதிரி தவறு நடக்காது எனக் கூறினேன். அதற்கு அவர் சிம்பிளாக நான் உனக்கு தானே தேதி கொடுத்தேன். எனக்காக திட்டமிட்ட நிகழ்வுகளை மாற்ற வேண்டாம். நீ என்னோட காட்சியை எடுக்குறதும், எடுக்காததும் உன் விருப்பம் என கூலாக சொல்லி விட்டு சென்றார்” என நடிகர் சுப்பு பஞ்சு தெரிவித்துள்ளார்.

