அடுத்தடுத்து ஹோட்டல் கிளைகளை திறந்த நடிகர் சூரி: அலைமோதிய கூட்டம்!
”சினிமாத்துறையை தாண்டி மதுரையில் தனது சொந்த பிசினஸின் மூலமாகமும் தன்னை பிசியாக வைத்துக் கொண்டுள்ளார் நகைச்சுவை நடிகர் சூரி “
தான் ஒரு நடிகராக வேண்டும், அல்லது சினிமாவில் நடித்தே ஆக வேண்டும் என கனவோடு பலரும் வாழ்ந்து வருவதுண்டு. அதற்கான முயற்சியை விடாமல் பலர் எடுப்பதுண்டு. கிராமங்களில் வசிக்கும் பலர் சினிமா கனவோடு சென்னையை நோக்கி செல்வதும் உண்டு. அப்படி தமிழ் சினிமாவில் கிராமங்களிலிருந்து சென்று சாதித்தவர்களும் உள்ளனர். அந்த வரிசையில் தான் தான் ஒரு நடிகராகிவிட வேண்டும் என்ற கனவோடு பள்ளி படிப்பை விட்டு விட்டு சென்னைக்கு வந்தவர் சூரி. இவர் ஆரம்ப காலங்களில் மறுமலர்ச்சி, சங்கமம் உள்ளிட்ட படங்களில் கூட்டத்தில் ஒருவராக நடித்துள்ளார் சூரி. அதன் பின்னர் பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தாலும் வெண்ணிலா கபடி குழு படத்தில் தான் தனது நகைச்சுவை மூலம் மக்களிடையே அறிமுகமாகி பேசப்பட்டார்.
அதில் உணவகம் ஒன்றில் 50 புரோட்டோ சாப்பிட்டால் 100 ரூபாய் வழங்கப்படும் சாப்பிட்ட புரோட்டாவுக்கு பணம் கொடுக்க வேண்டியதில்லை என போட்டி வைக்கப்பட்டு இருக்கும். அதில் 50 புரோட்டாக்களை சூரி சாப்பிட கடை ஊழியர் சூரியை ஏமாற்ற முயல்வார், ஆனால் சூரி இல்ல கள்ள ஆட்டம் ஆடுறீங்க.. நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன் என்று சொல்லுவார். இவரின் இந்த காமெடி ரசிகர்களை ஈர்த்ததோடு புரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார்.
அதன் பின்னர் பல படங்களில் முன்னணி நடிகர்களோடு நடித்ததோடு தனது நகைச்சுவை திறனால் மக்கள் மத்தியில் பேசப்பட்டார். இவரது பேச்சில் மதுரை மண் வாசம் இயல்பாகவே வீசும் என்பதால் பல கதைகளில் எளிதாக நடித்து தனது நகைச்சுவை மூலம் ரசிகர்களை கவர்ந்தார். நகைச்சுவை நடிகர்கள் என்றாலே கவுண்டமணி, செந்தில், வடிவேலு இவர்கள் தான் அனைவரின் நினைவுக்கும் வரும், அவர்களுக்கு பின் அந்த இடத்தை சூரி தனது நடிப்பு திறனால் வளர்த்துக் கொண்டவர். இப்படி பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரி தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். இதற்காக தனது உடலை அமைப்பை மாற்றி வருகிறார். சினிமாத்துறையை தாண்டி மதுரையில் தனது பிசினஸிலும் தன்னை பிசியாக வைத்துக் கொண்டுள்ளார். மதுரையில் குறிப்பாக அம்மன் என்ற பெயரில் சைவ உணவகமும், அய்யன் என்ற பெயரில் அசைவ உணவகமும் நடத்தி வருகிறார். இதனை அவரது உறவினர்கள் கவனித்துக் கொள்ள தனது உணவகத்தின் சுவை மற்றும் தரத்தின் மூலம் மதுரை மக்களின் மனதிலும் பிரபலமானார் சூரி.