Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
சுதா கொங்கரா தமிழில் முதலில் இயக்கிய துரோகி படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் முயற்சித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்பவர் சிவகார்த்திகேயன். இவர் சமீபத்தில் நடித்த பராசக்தி படம் பொங்கல் விருந்தாக வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.
இவர் முதன்முதலில் தமிழில் இயக்கிய படம் துரோகி. மணிரத்னம், பாலா ஆகிய இருவரிடமும் உதவி இயக்குனராக பணிபுரிந்த சுதா கொங்கரா இயக்கிய இந்த படத்தில் விஷ்ணு விஷால் - ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடித்திருப்பார்கள்.
துரோகியில் நடிக்க முயற்சித்த சிவகார்த்திகேயன்:
2010ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் முயற்சித்துள்ளார். இது குறித்து அவர் பராசக்தி படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
துரோகி படத்திற்கு நான் ஆடிஷன் போயிருந்தேன். அதில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக. அப்போது என்னால் மேடமை சந்திக்க இயலவில்லை. என்னை ஸ்ரீகாந்த் அனுப்பியிருந்தார். அவர் அப்போது டிவி ஷோ நடுவர் என்பதால் அனுப்பியிருந்தார். அப்போது, நான் ஆடிஷன் அட்டெண்ட் பண்ணினேன். ஆனால், அதில் நான் செலக்ட் ஆகவில்லை.
நிராகரித்தது ஏன்?
அதை மேடம் மென்ஷன் பண்ணாங்க. நீங்க நல்லா பண்ணவில்லை என்பதற்காக உங்களை செலக்ட் பண்ணாம இல்லை. நீங்க ஓவர் குவாலிபைடா இருந்தீங்க அப்படினு சொல்லி அந்த ரோலுக்கு ரொம்ப ஸ்வீட்டா சொன்னாங்க. ஆனா, எங்கேயோ ஒரு கனெக்ஷன் மட்டும் இருந்துட்டே இருந்தது. இறுதிச்சுற்று படத்தோட ட்ரெயிலரை சோஷியல் மீடியாவில் நான்தான் ரிலீஸ் பண்ணேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
துரோகி:
துரோகி படம் வெளியானபோது சிவகார்த்திகேயன் தொலைக்காட்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியன், தொகுப்பாளராக இருந்த தருணம். அவர் திரைத்துறையிலும் தன்னை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல தயாராகி முயற்சித்துக் கொண்டிருந்தார்.
2010ம் ஆண்டு வெளியான துரோகி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதன்பின்னர், 6 ஆண்டுகளுக்கு பிறகு இவர் மாதவன், ரித்திகா சிங் ஆகியோரை வைத்து இறுதிச்சுற்று என்ற படத்தை இயக்கியிருப்பார். இந்த படம் இவருக்கு ஒரு மிகப்பெரிய அடையாளத்தை உருவாக்கியது. பின்னர், சூரரைப் போற்று மூலம் மீண்டும் பெயர் பெற்ற சுதா கொங்கரா தற்போது பராசக்தியை இயக்கியுள்ளார்.
இந்தி திணிப்பு எதிர்ப்பு:
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், படத்தில் வரலாறை திரித்து கூறியிருப்பதாகவும் பலரும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.





















