கமலை பேச நீங்க யார்...என்ன பண்ணிருக்கீங்க...பொங்கி எழுந்த கன்னட நடிகர் ஷிவராஜ்குமார்
கன்னட மொழி குறித்து கமலின் கருத்திற்கு கடும் எதிர்ப்பு வந்த நிலையில் கமலுக்கு ஆதரவாக கன்னட நடிகர் ஷிவராஜ்குமார் பேசியுள்ளார்

கமலுக்கு ஆதரவாக பேசிய ஷிவ ராஜ்குமார்
கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது என தக் லைஃப் ஆடியோ லாஞ்சில் கமல் பேசியது கன்னடர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாக கன்னட மொழியின் வரலாறு தெரியாமல் கமல் பேசுவதாக கருத்து தெரிவித்தார். கமல் வெளிப்படையாக மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதிக்கப்படும் என கன்னட மாநில அமைப்புகள் தெரிவித்தன.
இப்படியான நிலையில் கமலுக்கு ஆதரவாக கன்னட நடிகர் ஷிவராஜ்குமார் பேசியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் " கன்னட சினிமாவைப் பற்றி கமல் எப்போதும் உயர்வாகவே பேசியிருக்கிறார். பெங்களூர் மேல் அவருக்கு ஒரு தனி பிரியம் இருக்கிறது. இந்த நகரத்தைப் பற்றி அவர் பெருமையாக பேசியிருக்கிறார். கமலைப் பார்த்து தான் நாங்கள் வளர்ந்திருக்கிறோம். பல வருடங்களாக நான் கமல் சாரின் தீவிர ரசிகனாக இருக்கிறேன். அப்படியென்றால் என் நான் தந்தையை மதிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. என் தந்தை என் குடும்பம். ஆனால் கமல் சார் வித்தியாசமானவர். அவர் எனக்கு ஒரு பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறார். உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பிடித்த நடிகர் இருப்பது போல் எனக்கு கமல் சார். ரசிகர்களுக்கு என்ன வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். அதை அவர் கொடுக்கவும் செய்திருக்கிறார். கமலை விமர்சிப்பவர்கள் கன்னட மொழிக்காக என்ன , சினிமாவிற்காக என்ன செய்திருக்கிறார்கள் ? என ஷிவராஜ் குமார் கேள்வி எழுப்பினார்.
தக் லைஃப்
நாயகன் படத்தைத் தொடர்ந்து கமல் மணிரத்னம் இணைந்துள்ள கூட்டணி தக் லைஃப். சிம்பு , த்ரிஷா , அபிராமி , ஜோஜூ ஜார்ஜ் , நாஸர் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளது. வரும் ஜூன் 6 ஆம் தேதி தமிழ், தெலுங்கு , இந்தி , கன்னடம் , மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.
கமலின் கருத்தைத் தொடர்ந்து தக் லைஃப் படத்தின் போஸ்டர்கள் கர்நாடகாவில் கிழிக்கப்பட்டன. தன் இடத்தில் நின்று பார்த்தால் தான் பேசுவது புரியும் என்றும் மொழிப் பற்றி பேச அரசியல்வாதிகளுக்கு தகுதியில்லை என்றும் கமல் தெரிவித்தார். அன்பு எப்போது மன்னிப்பு கேட்காது என தனது கருத்து குறித்து கமல் தெரிவித்துள்ளார்.





















