Actor Sethuraman Death Anniversary: "நான் அழ மாட்டேன்.." - நடிகர் சேதுவின் 2ம் ஆண்டு நினைவு நாளில் அவரது மனைவி உருக்கமான பதிவு..!
நடிகர் சேதுராமனின் 2ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது மனைவி உமா தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமான பதிவிட்டுள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டு வெளியான திரைப்படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா. இந்த படத்தில் நாயகனாக நடிகர் சேதுராமன் நடித்திருப்பார். அவருடன் சந்தானம், பவர்ஸ்டார் சீனிவாசன் உள்பட பலரும் நடித்திருப்பார்கள். நகைச்சுவை திரைப்படமான இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வெற்றி பெற்றது.
இந்த படத்தில் நாயகனாக நடித்திருந்த சேது ஒரு மருத்துவர் ஆவார். அவர் திரைத்துறையில் நுழைந்தபோதும் பெரும்பாலும் மருத்துவத்துறையிலே தனது கவனத்தை செலுத்தி வந்தார். இந்த நிலையில், திடீரென கடந்த 2020ம் ஆண்டு அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மரணம் திரைத்துறையினர் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அவரது இரண்டாவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. அவரது மனைவி உமா சேதுமாதவன் பதிவிட்டுள்ள பதிவு அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. அதாவது, அவர் தனது கணவரின் நினைவு நாள் குறித்து, “ நான் இனிமேல் அழமாட்டேன். இனிமேல் நான் அழுதால் இந்த உலகைவிட்டு சென்ற எனது கணவரின் ஆத்மாவுக்கு மிகுந்த வலியை கொடுக்கும் என்பதை புரிந்துகொண்டேன்.
நாம் ஒரு ஆத்மாவை இழந்தோம். ஆனால், அவரோ தான் சேர்த்து வைத்து இருந்த அத்தனை ஆத்மாக்களையும் பிரிந்து சென்றுவிட்டதால் அவருக்குதான் வலி அதிகம்.” என்று ஆங்கிலத்தில் மிகுந்த வேதனையுடன் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவை கண்ட பலரும் சேதுராமனின் மறைவு குறித்து மிகுந்த வருத்தத்துடன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சேதுராமன் உயிரிழந்தபோது சேதுராமன் - உமா தம்பதியினருக்கு ஒன்றரை வயதே ஆன மகள் இருந்தது. அந்த குழந்தையுடன் சேதுராமன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அவரது மறைவின்போது பலரையும் வேதனைக்குள்ளாக்கியது. சேதுராமன் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பிறகு, வாலிப ராஜா, சக்கை போடு போடு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சந்தானத்தின் மிக நெருங்கிய நண்பர் சேதுராமன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Aadhi On kavithaigala Song: நீ கவிதைகளா சாங்ல ஆன்மா இருக்கு..! அது என்னைய அப்செட் ஆக்கிட்டு - மனம் திறந்த ஆதி!!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்