25 Years of Natpukkaga: மறக்க முடியாத ‘மீசக்கார நண்பா’.. 25 ஆண்டுகளை நிறைவு செய்த நட்புக்காக படம்...!
சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, நாட்டாமை படங்களுக்குப் பின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நடிகர் சரத்குமாருடன் 4வது முறையாக இணைந்த படம் தான் ‘நட்புக்காக’.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய நட்புக்காக திரைப்படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
வெற்றிக்கூட்டணியின் 4வது படம்
தன்னுடைய சினிமா கேரியரில் 90களில் அனைத்து முன்னணி ஹீரோக்களையும் இயக்கிய இயக்குநர்களில் முதன்மையானவர் ‘கே.எஸ்.ரவிகுமார்’. இவர் சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, நாட்டாமை படங்களுக்குப் பின் நடிகர் சரத்குமாருடன் 4வது முறையாக இணைந்த படம் தான் ‘நட்புக்காக’. ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரித்த இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகன் ஜோதிகிருஷ்ணா எழுதியிருந்தார். நட்புக்காக படத்தில் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் சரத்குமார் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் விஜயகுமார், சிம்ரன், மனோரமா, சித்தாரா, சுஜாதா, மன்சூர் அலிகான், மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், ரஞ்சித், செந்தில், அனுமோகன், மாஸ்டர் மகேந்திரன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். தேவா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
படத்தின் கதை
பண்ணையார் விஜயகுமாரிடம் சரத்குமாரிடம் வேலையாளாக இருக்கிறார். விஜயகுமாரின் மனைவியான சுஜாதாவை அவரது தம்பியான மன்சூர் அலிகான் கொலை செய்து விடுவார். ஆனால் சரத்குமார் சிறை செல்வார். உண்மையில் என்ன நடந்தது என்பது விஜயகுமாருக்கு மட்டுமே தெரியும். இதனால் சரத்குமாரின் மகனான இன்னொரு சரத்குமாரை விஜயகுமார் வளர்த்து வருவார். தன் தாயின் மரணத்துக்கு காரணமான அப்பா சரத்குமாரின் மகனை தன்னில் ஒருவராய் விஜயகுமார் வைத்திருப்பதை கண்டு கோபம் கொள்ளும் அவரது மகள், எப்படி பழிவாங்க முயற்சிக்கிறார் என்பதே இப்படத்தின் கதையாகும்.
இந்த படம் விஜயகுமார் - (அப்பா) சரத்குமார் இடையேயான நட்புக்காக 2கே ரசிகர்கள் வரை பேசும் படமாக உள்ளது.கிளைமேக்ஸ் காட்சியில் தன் நண்பன் இறந்ததும், சோகத்தில் அதே இடத்தில் இறந்துபோகும் விஜயகுமாரின் நடிப்பு மிகுந்த பாராட்டைப் பெற்றது.
பட்டையை கிளப்பிய பாடல்கள்
கவிஞர் காளிதாசன் எழுதிய பாடல்களுக்கு தனது தேனிசையை தந்திருந்தார் தேவா. குறிப்பாக அவரே பாடிய ‘மீசைக்கார நண்பா’ பாடல் இன்று வரை நட்பின் இலக்கண பாடலாய் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கிறது. இதேபோல் அடிக்கிற காய் அணைக்குமா, கருடா கருடா, சின்ன சின்ன முந்திரியா போன்ற டூயட் பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
நட்புக்காக படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் சினேகம் கோசம் என்னும் பெயரில் வெளியானது. இதனை கே.எஸ்.ரவிக்குமாரே இயக்கினார். தொடர்ந்து திக்காஜரு (2000) என்ற பெயரில் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழ் மாநில அரசு விருது, பிலிம்பேர் விருதுகளை குவித்த இப்படம் மிகச்சிறப்பான வெற்றியை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.