அதை நினைச்சாதான் வருத்தமா இருக்கு.. மகள் அருணாவை நினைத்து கலங்கிய ராமராஜன்
என்னோட குழந்தைகள் அருண் மற்றும் அருணா இருவரும் இரட்டை குழந்தைகள். இதில் மகள் வழக்கறிஞராக இருக்கிறார். மகன் ஆடிட்டராக இருக்கிறார் என ராமராஜன் தெரிவித்துள்ளார்.
மறைந்த குடியரசு தலைவர் அப்துல்கலாமை தான் சந்தித்த நிகழ்வை நேர்காணல் ஒன்றில் நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 80களில் காலக்கட்டத்தில் மக்கள் கலைஞன் என்று கொண்டாடப்பட்டவர் ராமராஜன். கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சாமானியன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 23 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது. இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய ராமராஜன் தனது குழந்தைகள் பற்றிய சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், “என்னோட குழந்தைகள் அருண் மற்றும் அருணா இருவரும் இரட்டை குழந்தைகள். இதில் மகள் வழக்கறிஞராக இருக்கிறார். மகன் ஆடிட்டராக இருக்கிறார். இருவருக்கும் திருமணமாகி நல்ல நிலைமையில் உள்ளனர். மகனுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், மகளுக்கு இதுவரை குழந்தைகள் இல்லை என்பது வருத்தமான விஷயமாக உள்ளது.
நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆன தந்தை எல்லாம் இல்லை. நளினிதான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார். நான் ஷூட்டிங் முடித்து விட்டு வரும்போது குழந்தைகள் தூங்கி விடுவார்கள். அவர்கள் முழித்திருக்கும்போது நான் ஷூட்டிங் சென்று விடுவேன். அதனால் எங்களுக்குள் பெரிய அளவில் பிணைப்பு இல்லாமல் இருந்தது. இரண்டு பேரும் நன்றாக படிப்பார்கள். எனக்கு படிப்பே வராது. நான் அவர்கள் சிறு வயதாக இருக்கும்போது ஒரு விஷயம் கேட்ட நியாபகம் இருக்கிறது. அன்றைக்கு டாக்டர், இன்ஜீனியர் படிப்புகள் பிரபலமாக இருந்தது. இதில் என்ன படிக்கப் போகிறாய் என கேட்டேன். அதற்கு இருவரும், இந்த 2 படிப்புகள் தவிர வேறு எது வேண்டுமானாலும் படிக்கிறேன் என சொன்னார்கள்.
எல்லாரையும் செய்ய வேண்டியதை நாங்கள் ஏன் செய்ய வேண்டும் என கூறினார்கள். அதேசமயம் என் மகளுக்கு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் காலம் வழக்கறிஞராக மாற்றி விட்டது. மகன் விஞ்ஞானியாக வேண்டும் என சொன்னான். நான் ஒருமுறை டெல்லிக்கு சென்று விட்டு வரும்போது மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் என்னுடைய பக்கத்து இருக்கையில் இருந்தார். நான் அவரிடம் என்னை அறிமுகம் செய்துக் கொண்டு என்னுடைய மகன் உங்களின் மிகப்பெரிய ரசிகன் என சொல்லி அப்துல்கலாமிடம் ஆட்டோகிராஃப் வாங்கி கொடுத்தேன்.
என்னுடைய பேரனிடம் சாமானியன் பாடல் ஒன்றை காட்டியிருக்கிறார்கள். நான் தாத்தா மாதிரி ஆக போகிறேன் என சொன்னதாக கூறினார்கள். அவர்கள் லண்டனில் இருப்பதால் ஆங்கிலத்தில் தான் பேசுகிறார்கள். தமிழில் எல்லாம் பேசுவதில்லை” என்றார்