AVM Saravanan: ஓட்டுக்காக வரவில்லை.. எல்லாம் அன்பு தான்.. முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்!
தன்னுடைய பணிச்சூழலுக்கு இடையே முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். முதலமைச்சர் பதவியில் ஒவ்வொரு நாளும் விலை மதிக்க முடியாதவை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

மறைந்த ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரான சரவணனின் படத்திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்தார்.
ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான சரவணன் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார். அவர் மறைந்து ஒரு மாதம் ஆன நிலையில் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துக் கொண்டு ஏவிஎம் சரவணன் படத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், வைரமுத்து, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “சிந்தனை, பேச்சு, செயல் ஆகியவற்றில் தூய்மை என்றால் அதுதான் ஏவிஎம் சரவணன். 1975ம் ஆண்டு அவர்கள் படத்தின் ஷூட்டிங் ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்தபோது என் முன்னால் ஒரு பெரியவர் முன்னால் சென்று கொண்டிருந்தார். அவர் வேஷ்டி, ஜிப்பாவுடன் அணிந்து சென்று கொண்டிருக்கிறார். அவர் தான் ஏவி மெய்யப்ப செட்டியார். அதன்பின்னால் வெள்ளை சட்டை, பேண்ட் அணிந்து கைகட்டி கொண்டே போனார். அவர் தான் ஏவிஎம் சரவணன். இதையெல்லாம் கமல் என்னிடம் சொன்னார். அதன்பின்னால் தூரத்தில் இருந்து அவரை பார்த்திருக்கிறேன். 1980ம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் படத்தயாரிப்பில் இருந்து விலகி 8 வருடங்கள் ஆகியிருந்தது.
மீண்டும் ஒரு படம் தயாரிக்கலாம் என்ற நிலையில் நான் நடித்த முரட்டுக்காளை படம் முடிவானது. நான் ஹீரோவாக தேர்வு செய்ய ஏவி மெய்யப்ப செட்டியார் தான் காரணம் என சொன்னார்கள். உடனே சரவணன் ஆபிஸில் அவரை சந்தித்தேன். அந்த ஆபீஸ் மிகவும் சுத்தமாக இருந்தது. உள்ளேயே மிகப்பெரிய பாசிட்டிவிட்டி இருந்தது. ஏவிஎம் கம்பெனியில் நான் 11 படம் பண்ணியிருக்கிறேன். அதில் 9 படம் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கியது.
ஒவ்வொரு படத்துலயும் கதையை நாம் கேட்கவே வேண்டாம். ஒவ்வொரு கதையையும் யார் நடிக்க வேண்டும், ரசிகர்கள் என்ன விரும்புகிறார்கள், அதை வெற்றிப் படமாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து இசை, ஒளிப்பதிவு என அனைத்து துறைகளிலும் ஏவிஎம் கை இருக்கும். அதுதான் ஏவிஎம் சரவணன்.
நான் எஜமான் படம் நடித்தேன். அதற்கு முன்பாக நடித்த நல்லவனுக்கு நல்லவன் போன்ற ஒரு சென்டிமென்ட் படம் போல ஒரு படம் வேண்டும் என சரவணன் கூறியிருந்தார். அப்போது அவரிடம் ஆர்.வி.உதயகுமார் பெயரை சொல்லி நல்ல கதை வைத்திருக்கிறார் என சொன்னேன். கேட்டால் கதையை கொடுப்பாரா என சரவணன் கேட்க, இல்லை அவரே படம் இயக்குவார் என நான் சொன்னேன்.
உடனே, நமக்கு எஸ்.பி.முத்துராமன் இத்தனை படம் பண்ணியிருக்கிறார். அவர் ஆக்டிவாக இருக்கும்போது வேறுபடம் பண்ண முடியாது என சரவணன் சொன்னார். ஒருநாள் நான் ஷூட்டிங்கில் இல்லை என கேள்விப்பட்டதும் எஸ்.பி.முத்துராமன் என்னை அழைத்து ஆர்.வி.உதயகுமாருடன் அந்த படம் பண்ணுமாறு என் முன்னால் ஏவிஎம் சரவணனிடம் சொன்னார். அவருக்கு சம்மதம் இல்லையென்றாலும், அப்படியென்றால் நான் உங்களுக்கு ஏவிஎம் ஸ்டூடியோவில் ஒரு ரூம் போட்டு தர்றேன். நீங்க தினமும் அங்க வரணும் என ஏவிஎம் சரவணன் தெரிவித்தார். அதுதான் அவரிம் நட்புக்கு இலக்கணம்.
ஏவிஎம் சரவணன் தனிப்பட்ட முறையில் நிறைய உதவி பண்ணியிருக்கிறார். கோடம்பாக்கத்தில் இருக்கும் என்னுடைய ராகவேந்திரா மண்டபம் அவர் தான் உருவாக்கி கொடுத்தார். போயஸ் கார்டனில் என் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் காலி இடத்தை எவ்வளவு விலை என்றாலும் வாங்குமாறு சொல்லி அறிவுரை வழங்கினார். சிவாஜி படம் வந்தபோது வயது ஆக ஆக ஆக்டிவாக இருக்கணும், பிசியா இருக்கணும். வருடத்திற்கு ஒரு படமாவது பண்ணுங்க என சொன்னார். அதனை இப்போது பின்பற்றி வருகிறேன். சிவாஜி படம் அரசியல்வாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட படம். அதன் வெற்றி விழாவில் அப்போதைய கலைஞர் கருணாநிதி பங்கேற்றது சரவணனுக்காக மட்டும் தான்.
அதேபோல் இந்நிகழ்வில் தன்னுடைய பணிச்சூழலுக்கு இடையே முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். முதலமைச்சர் பதவியில் ஒவ்வொரு நாளும் விலை மதிக்க முடியாதவை. தேர்தல் சமயத்தில் அவர் இங்கு வந்திருப்பதால் 100 ஓட்டு அதிகம் கிடைக்கப் போவதில்லை. எனினும் இங்கு வந்திருப்பது ஏவிஎம் சரவணன் மீதுள்ள அவர் வைத்திருக்கும் அன்பு தான் காரணம்” என தெரிவித்தார்.





















