Prithviraj: சினிமா பற்றி பகத் ஃபாசில் கருத்து! பிரித்விராஜ் சொன்னது என்ன?
சினிமாவைப் பற்றி நடிகர் ஃபகத் ஃபாசில் தெரிவித்த கருத்திற்கு நடிகர் பிருத்விராஜ் கருத்து தெரிவித்துள்ளார்
சினிமா ஆர்வலர்களை சீண்டிய ஃபகத் ஃபாசிலின் கருத்து
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் பேசிய கருத்துக்கள் சினிமா ரசிகர்களை சீண்டியுள்ளது. இந்த நேர்காணலில் அவர் “ எனக்கு சினிமாவைப் பற்றி பேசுவது பிடிக்காது. என் நெருங்கிய நண்பர்கள், மற்றும் என் மனைவியுடன் கூட நான் சினிமாவைப் பற்றி அதிகம் பேச மாட்டேன். சினிமா என்பது வாழ்க்கையின் ஒரு சின்ன பகுதிதான் அதைத் தவிர்த்து வாழ்க்கையில் தெரிந்து கொள்வதற்கும் பேசுவதற்கும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.
அதேபோல் ஒரு நடிகனாக என்னை ரசிகர்கள் கொண்டாடுவதை நான் விரும்பவில்லை. ரசிகர்கள் என் படங்களைப் பார்க்கலாம் அதுவும் நன்றாக இருந்தால் மட்டும் அவ்வளவுதான் . அதற்கு பிறகு என்னை மறந்துவிட்டு அவர்கள் வேறு எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம். ஒரு படம் பார்த்தால் அதை பார்த்துவிட்டு வீடு திரும்பும் வழியில் அந்த படத்தைப் பற்றி பேசலாம். ஆனால் உங்கள் உணவு மேஜையில் நீங்கள் சினிமாவைப் பற்றி பேசத் தேவையில்லை ” என்று பகத் ஃபாசில் கூறியிருந்தார்
பகத் ஃபாசிலின் இந்த கருத்துக்கள் உலக சினிமா ரசிகர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் பலரை உள்ளூர சீண்டிவிட்டது என்றே சொல்லலாம் . ஒரு நாளைக்கு மூன்று படங்களைப் பார்த்து சினிமாவையே சுவாஸித்து வரும் சினிமா ஆர்வலர்கள் பகத் ஃபாசிலின் கருத்தைக் கேட்டு ‘ என்ன இவர் எப்டி சொல்லிட்டாரு’ என்கிற மனநிலையே ஏற்பட்டது. பகத் ஃபாசிலின் கருத்தைப் பற்றி மலையாள நடிகர் பிருத்விராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
ஃபகத் ஃபாசில் கருத்திற்கு பிருத்விராஜ் கருத்து
நிகழ்ச்சி ஒன்றில் பெயர் குறிப்பிடப் படாமல் பகத் ஃபாசில் சொன்ன கருத்தைப் பற்றி பிருத்விராஜ் என்ன நினைக்கிறார் என்று கேள்வி எழுப்பப் பட்டது இதற்கு பதிலளித்த பிருத்விராஜ் “ அவர் சொன்ன கருத்தில் அர்த்தம் இருக்கிறது . நிச்சயமாக ஒரு நடிகனாக சினிமா எனக்கு லைஃப் மாதிரி. சினிமா எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது. ஆனால் சினிமா மட்டும் தான் வாழ்க்கையா? என்றால் இல்லை. ஒருவேளை நாளையே சினிமா என்கிற ஒன்று இல்லாமல் போய்விட்டால்.
அது இந்த உலகத்தில் பெரியளவிலான மாற்றங்களை எல்லாம் ஏற்படுத்திவிடாது. இந்த மாதிரியான விஷயங்களை எல்லாம் நாம் எதார்த்தமாக புரிந்துகொள்ள வேண்டும் . மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சக்தி சினிமாவிற்கு இருக்கிறது. ஆனால் உங்கள் வாழ்க்கையில் சினிமாவுக்கான இடத்தை நீங்கள் ஒதுக்கி வைத்துக் கொள்ள வேண்டும் . நான் உட்பட சினிமா நிறைய நபருக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறது தான். ஆனால் ஒவ்வொருத்தரின் வாழ்க்கையில் சினிமா எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்வது நம் கையில் தான் இருக்கிறது."
இவ்வாறு அவர் கூறினார்.