Prakashraj: என்னிடம் விஜயகாந்துக்கு பிடித்த ஒரு விஷயம் என்ன தெரியுமா? - பிரகாஷ்ராஜ் பகிர்ந்த தகவல்
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மரணம் திரையுலகினர், பொதுமக்கள் இடையே நீங்கா துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தை நான் நம்பிக்கை மனிதராகத்தான் பார்த்தேன் என நடிகர் பிரகாஷ்ராஜ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மரணம் திரையுலகினர், பொதுமக்கள் இடையே நீங்கா துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நடிகர் பிரகாஷ்ராஜ் நேர்காணல் ஒன்றில் விஜயகாந்த் பற்றி பேசியுள்ளார்.இருவரும் இணைந்து வாஞ்சிநாதன், சொக்கத்தங்கம், பேரரசு உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
அந்த நேர்காணலில் பேசிய பிரகாஷ்ராஜ், “நான் கர்நாடகாவில் இருக்கும் போது தமிழ் சினிமாவில் விஜயகாந்த் ஒரு நடிகர் இருக்காரு என்று கேள்விப்பட்டேன். அவரோட படங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனா தமிழ்நாட்டுக்கு வந்த பிறகுதான் விஜயகாந்த் பத்தி நான் இன்னும் நிறைய தெரிஞ்சிக்கிட்டேன். அந்த சமயம் நான் வாய்ப்பு தேடி சாப்பிடாம அலைந்து தெரிஞ்சுக்கிட்டு இருந்த சமயம். அப்போதுதான் விஜய் விஜயகாந்த் ஆபீஸ்ல எந்த நேரமும் சாப்பாடு போடுவாங்கன்னு கேள்விப்பட்டேன். அதை கேட்டதும் அவர் மீது எனக்கு மரியாதை வந்துச்சு.
ஒரு கட்டத்துல தமிழ் சினிமாவில் நான் வில்லன் நடிகராக பிரபலமாகிட்டு இருந்தேன். அப்போது விஜயகாந்துடன் வாஞ்சிநாதன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஷூட்டிங் சமயத்தில் என்னை பார்த்து, ‘வாங்க பிரகாஷ்.. உங்க படங்கள் எல்லாம் பார்த்து இருக்கேன். நல்லா பண்ணிட்டு இருக்கீங்க என சொன்னார். அதைக் கேட்டதும் சந்தோசமாக இருந்தது. மேலும் எனக்கு என்ன சாப்பாடு பிடிக்கும் என கேட்டதற்கு நான் பிரியாணி என சொன்னேன். உடனே தலப்பாக்கட்டி ஸ்டைலில் கோதுமை ரவா பிரியாணி கொண்டு வந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னை சாப்பிட வைத்து அழகு பார்த்தார்.
தான் ஒரு பெரிய ஹீரோ என்ற மந்தா கொஞ்சம் கூட இல்லாமல் அனைவர் மீதும் விஜயகாந்த் அளவற்ற அன்பு காட்டினார். வாஞ்சிநாதன் படத்தில் நடித்த சமயத்தில் நான் இருவர்,கல்கி என மொத்தம் மூணு படங்கள் பண்ணிக் கொண்டிருந்தேன். ஒரு நாள் என்னிடம், “என்ன பிரகாஷ் தினமும் மூன்று ஷிப்ட் நடிக்கிறீங்களாமே?” எனக் கேட்டார்.
நான், "வாய்ப்பு எல்லாம் ஒரே சமயத்தில் வந்திருச்சு. அதனால் சமாளித்து பண்ணிட்டு இருக்கேன்” என சொன்னேன். அதற்கு அவர், “அப்படித்தான் பண்ணனும். வேறு மொழியில் இருந்து வந்தாலும் அந்த வாடை இல்லாம தமிழ் அழகா பேசுறீங்க. அதுதான் எனக்கு உங்ககிட்ட ரொம்ப பிடிச்சிருக்கு” என பாராட்டினார். மறுபடியும் விஜயகாந்த் உடன் நான் சொக்கத்தங்கம் படத்தில் இணைந்து நடித்தேன். அந்தப் படத்தில் எனக்கு மிகவும் அழுத்தமான கேரக்டர் இருந்தது. அதோடு மட்டுமல்லாமல் பெரிய பெரிய வசனங்களும் இருந்தது. அதனை எல்லாம் பேசி முடிக்கும் போது, “நீங்க நல்ல கலைஞன் சூப்பரா வசனம் பேசுகிறீங்க, பெரிய ரவுண்டு வருவீங்க” என வாழ்த்தினார். ஊர் பக்கம் இருந்து சினிமாவுக்கு வரவர்களை அன்போடு அரவணைத்து, “முயற்சித்தால் சினிமாவில் ஜொலிக்கலாம்” என நம்பிக்கை மனிதராகத்தான் நான் விஜயகாந்தை பார்க்கிறேன்” என பிரகாஷ்ராஜ் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.