HBD Prakash Raj : `ஹாய் செல்லம் ஹேப்பி பர்த்டே!’ : 300 ரூபாய் முதல் சம்பளம்.. வீதி நாடகம்.. கஷ்டம்.. பிரகாஷ்ராஜின் பயணம்..
நடிகர் பிரகாஷ் ராஜ் பிறந்தநாளை முன்னிட்டு, அவரைப் பற்றி பெரிதும் தெரியாத சில தகவல்களை இங்கே கொடுத்துள்ளோம்...
காமெடி, குணசித்திரம், வில்லன் என எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும், அதில் தன்னுடைய பங்களிப்பைச் சிறப்பாக மேற்கொள்ளும் நடிகராகவும், தமிழ்நாட்டின் `செல்லம்’ எனவும் கொண்டாடப்படுபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். தன்னுடைய சமூகப் பணி, தைரியமான அரசியல் கருத்துகள் முதலானவற்றால் அனைவரையும் ஈர்க்கும் நடிகர் பிரகாஷ் ராஜ், வரும் மார்ச் 26 அன்று தன்னுடைய 57வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார்.
`மிதிலேய சீதேயாரு; என்ற திரைப்படத்தின் மூலமாகத் தனது கரியரைத் தொடங்கிய பிரகாஷ் ராஜ், கடந்த 1992ஆம் ஆண்டு வெளியான `ஹரகேய குரி’ திரைப்படத்தின் மூலமாகப் பிரபலமடைந்தார். வெறும் 300 ரூபாய் சம்பளத்தின் தனது பயணத்தைத் தொடங்கிய நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று தன்னுடைய திரைப்படங்களுக்காக 4 முதல் 5 கோடி ரூபாய் வரையிலான சம்பளம் பெறுகிறார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் பிறந்தநாளை முன்னிட்டு, அவரைப் பற்றி பெரிதும் தெரியாத சில தகவல்களை இங்கே கொடுத்துள்ளோம்...
1. தன் தொழில் வாழ்க்கையின் தொடக்க காலத்தில், அவர் பங்கேற்று வந்த நாடக நிகழ்ச்சிகளுக்காக மாதம் 300 ரூபாய் ஊதியம் பெற்று வந்தார் நடிகர் பிரகாஷ் ராஜ். வீதி நாடகங்களில் அதிக ஈடுபாட்டுடன் பங்கேற்று வந்தவர் பிரகாஷ் ராஜ். அவர் இதுவரை சுமார் 2 ஆயிரம் வீதி நாடகங்களில் நடித்துள்ளார். அவர் தான் 7ஆம் வகுப்பு படித்த போது நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார் எனக் கூறப்படுகிறது.
2. குணசித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் பிரகாஷ் ராஜ், காலப்போக்கில் தனது வில்லன் கதாபாத்திரங்களுக்காகப் போற்றப்படுகிறார். அவர் வில்லனாக நடித்த `கில்லி’, `சிங்கம்’, `கல்கி’, `அந்நியன்’, `தபாங் 2’ முதலான திரைப்படங்கள் அவரது ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுகிறது. மேலும், தான் வில்லனாக நடித்துள்ள திரைப்படங்களில் நடிகர் பிரகாஷ் ராஜ் முன்னணி வேடங்களில் நடிக்கும் நடிகர்களை விட அதிக புகழைப் பெறாமல் நடிப்பது அவரது பாணி.
3. தான் எந்த டெம்ப்ளேட்டையும் பின்பற்றுவது இல்லை எனவும், அதுவே தனது வெற்றிக்கான மந்திரம் எனவும் நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் சிறந்த நடிகர்களுள் ஒருவராகவும், தன்னுடைய தனித்த ஸ்டைலை ஒவ்வொரு வில்லன் கதாபாத்திரத்திலும் வெளிப்படுத்துபவராகவும் இருப்பதாகப் போற்றப்படுகிறார்.
4. பிரகாஷ் ராஜ் தீவிரமான புத்தகப் பிரியர். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில், அவர் புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பார் எனக் கூறப்படுகிறது.
5. பல திறமைகளைக் கொண்ட கலைஞரான நடிகர் பிரகாஷ் ராஜ், துலு, கன்னடம், தமிழ், தெலுங்கு, மராத்தி, இந்தி, மலையாளம் ஆகிய பல மொழிகளில் புலமை கொண்டவர்.
6. நடிப்பு, வாசிப்பு ஆகியவை போக, விவசாயத்தின் மீதும் தீவிர ஆர்வம் கொண்டவர் நடிகர் பிரகாஷ் ராஜ். அவர் ஹைதராபாத்தில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாத ஆர்கானிக் தோட்டம் ஒன்றையும் வைத்திருக்கிறார்.
தன்னுடைய திரைப்பயணத்தின் உச்சத்தில் இருக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ் அடுத்தடுத்து விருமன், பொய்க்கால் குதிரை, கே.ஜி.எஃப் சேப்டர் 2 முதலான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.