Actor Prabhu: நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சி...
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான பிரபு, சிறுநீரகப் பிரச்சினை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான பிரபு, சிறுநீரகப் பிரச்சினை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இளைய மகனான பிரபு சங்கிலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். 100க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்த அவரின் பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. 2004 ஆம் ஆண்டிற்குப் பின் ஹீரோவை தொடர்ந்து குணச்சித்திர கேரக்டரில் பிரபு நடிக்க தொடங்கினார். அவருக்கு சந்திரமுகி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், தாமிரபரணி, உனக்கும் எனக்கும், அயன், பில்லா,3, ஆம்பள, தெறி, சாமி-2 என பல படங்களில் நடித்து பாராட்டைப் பெற்றார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பிரபு நடித்துள்ளார்.
கடந்தாண்டு மட்டும் பிரபு நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல், பொன்னியின் செல்வன், லத்தி ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் வெளியான நடிகர் விஜய்யின் வாரிசு படத்திலும் பிரபு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். கடந்த 2 தினங்கள் முன்பு கூட நடிகர் மயில்சாமி மறைவுக்கு அவரது வீட்டுக்கு சென்ற பிரபு, உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்தார்.
இந்நிலையில் சிறுநீரகப் பிரச்சினை காரணமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரபு நேற்று முன்தினம் (பிப்ரவரி 20) ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று (பிப்ரவரி 21) காலை யூரித்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரபு தற்போது பூரண உடல் நலத்துடன் இருக்கிறார் என்றும், அறுவை சிகிச்சைக்கு பின்னால் மேற்கொள்ளப்படும் பொதுவான மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரபு விரைந்து நலம் பெற ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.





















