`அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ அருகில் இருந்து பார்த்த ரகுவரன்... விவரிக்கும் நிழல்கள் ரவி!
பூவிழி வாசலிலே’ படத்தில் அவரின் கைத்தடி பிடித்து நடப்பது குறித்து நான் ஐடியா தந்திருக்கிறேன். அப்போது எப்படி நடப்பது குறித்து நான் அவரிடம் பேசியிருக்கிறேன்
தமிழ் சினிமாவின் மூத்த ந்டிகர்களுள் ஒருவரான `நிழல்கள்’ ரவி சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகர் ரகுவரன் உடனான தனது நினைவலைகளைப் பகிர்ந்திருந்தார். அவற்றில் இருந்து சிலவற்றை இங்கே வழங்கியுள்ளோம்..
`நிழல்கள்’ ரவி பேசிய போது, `ரகுவரனும், நானும் ஒரே நேரத்தில் கல்லூரிப் படிப்பை முடித்தவர்கள். கோவையில் உள்ள பிரபலமான திரையரங்கம் ரெயின்போ தியேட்டரில் ரகுவரனின் அப்பா கேண்டீன் வைத்திருந்தார். அந்தத் தியேட்டரில் ஆங்கிலப் படங்கள் மட்டும் தான் திரையிடுவார்கள்.. அப்போது கௌபாய் திரைப்படங்கள் தான் பிரபலம். நாங்கள் அந்தப் படங்களைப் பார்த்துவிட்டு, கௌபாய்களைப் போல கண்ணைத் திருப்பி பார்ப்போம். அப்படி கல்லூரி படிக்கும் போதே, ரகுவரன் எனக்கு அறிமுகம்.’ எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், `சென்னை வந்த பிறகு, ரகுவரன் `ஏழாவது மனிதன்’ படத்தின் மூலமாகவும், நான் `நிழல்கள்’ படத்தின் மூலமாகவும் திரைத்துறைக்குள் வந்தோம். ஏற்கனவே அறிமுகம் என்பதால், எங்கள் நட்பு தொடர்ந்தது. `நிழல்கள்’ முடித்தவுடன், எனக்கு சுமார் 6 முதல் 8 மாதங்கள் வரை எந்த வாய்ப்பும் கிடைக்காமல் இருந்தது. பாரதிராஜா சார் என்னிடம் `வாய்ப்பு வரும்யா!’ என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அதே நேரத்தில் ரகுவரனுக்கும் பெரிதாக எந்த வாய்ப்பும் வரவில்லை. அப்போது இருவரும் சந்திப்போம். பைக்கில் காஃபி ஷாப் போவோம்.. அங்கு பேசுவோம்.. அப்போது இருவருக்கும் மலையாளத்தில் `சிப்பி’ என்ற படத்தின் வாய்ப்பு கிடைத்தது.. ரகுவரனுக்குப் பிற்காலத்தில் மனைவியாகிய ரோஹிணி அதில் ஹீரோயின்.. நான், ரகுவரன், ரோஹிணி ஆகிய மூவரும் அந்தப் படத்தில் நடித்தோம். ஆலப்புழாவில் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது இருவருக்கும் ஒரே அறை.. நாங்கள் எப்போதும் இந்திப் பாடல்கள் பாடுவோம்.. கிஷோர் குமாரின் பாடல்கள் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். இருவருக்கும் இந்தி புரியாது.. ஆனாலும் இருவருக்குமே கிஷோர் குமாரின் பாடல்கள் மீது அவ்வளவு ஈர்ப்பு. ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது நாங்கள் ஏதோ விடுமுறைக்கு சென்றது போல, அந்த ஒரு மாதமும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்.’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், `அந்தப் படப்பிடிப்பில் தான் ரகுவரனுக்கு ரோஹிணிக்கும் இடையிலான காதல் தோன்றிய தொடக்க காலம்.. `அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ என்பதை நானே அவர் பின்னாடி நின்று பார்த்திருக்கிறேன்.. அதன்பிறகு அவருடன் பெரிதாக பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு கேப் உருவானது’ என்றும் அவர் கூறியுள்ளார்.
ரகுவரனின் மரணம் பற்றிய பேசிய `நிழல்கள்’ ரவி, `அவருடைய இறப்பு எனக்கு மிகப்பெரிய பேரிழப்பு.. நானும் அவரும் பலவற்றை உரையாடுவோம்.. நடிப்பு குறித்து பேசுவோம். `பூவிழி வாசலிலே’ படத்தில் அவரின் கைத்தடி பிடித்து நடப்பது குறித்து நான் ஐடியா தந்திருக்கிறேன். அப்போது எப்படி நடப்பது குறித்து நான் அவரிடம் பேசியிருக்கிறேன்.. பல கதாபாத்திரங்கள் குறித்து உரையாடியிருக்கிறோம்.’ என்று கூறினார்.