Dasara: ‘எட்டு டிகிரி குளிர்... தசரா படத்திற்காக ரொம்ப கஷ்டப்பட்டேன்..’ மனம் திறந்த நானி!
Nani: நானி-கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ள தசரா திரைப்படம் இந்த வார இறுதியில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இந்திய அளவில் வரவேற்பு உள்ளது.
இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ள நடிகர்களில் ஒருவர், நானி. ராஜமெளலியின் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டில் வெளியான “நான் ஈ” திரைப்படத்தின் மூலம் பலரது மனங்களில் இடம் பிடித்தவர் இவர். நேனு லோக்கல், ஆஹா கல்யாணம் போன்ற படங்களில் ரொமாண்டிக் ஹீரோவாக நடித்து வந்த இவர் ஷ்யாம் சிங்கா ராய், ஜெர்ஸி போன்ற படங்களின் மூலம் வலிமையான கதாநாயகனாக உருமாறி புதுமை காட்டினார். இவர் நடித்துள்ள ‘தசரா’ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது. நானி, இந்த படத்தில் முதன்முறையாக ஆக்ஷன் ஹீரோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
தசரா ரிலீஸ்
ஸ்ரீகாந்த் எனும் புதுமுக இயக்குனரின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் தசரா. இப்படத்தில் நடிகர் நானி தரணி எனும் கதாப்பாத்திரத்திலும் கீர்த்தி சுரேஷ் வெண்ணிலா எனும் கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்கள் மட்டுமன்றி நடிகர்கள் சமுத்திரக்கனி, சாய்குமார், ஜரிணா வஹாப் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். சிங்கனேரி நிலக்கரி சுரங்கத்தை சுற்றி நிகழும் கதையாக, தசரா படம் அமைந்துள்ளது.
கடந்தாண்டு முதல் நடைப்பெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. இப்படம், வரும் வியாழன் அன்று திரைக்கு வர இருக்கிறது. பான் இந்தியா அளவில் வெளிவர உள்ள இப்படத்திற்கு, படக்குழு பல்வேறு நகரங்களுக்கு செய்து ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், படத்தின் நாயகன் நானி சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார். அதில், படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டார்.
“மிகவும் கஷ்டப்பட்டேன்..”
தசரா திரைப்படம் கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம், கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளதால் அந்த கிராமமே பெரிய நிலப்பரப்பில் ‘செட்’ ஆக போடப்பட்டுள்ளது. படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக நடந்த நேர்காணலில் நானி கலந்து கொண்டார். அதில், அவரிடம் தசரா படத்தில் நடித்த அனுபவம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நானி பின்வருமாறு பதிலளித்தார்
“தசரா படம் எனக்கு மிகவும் புதுமையான அனுபவத்தை தந்தது. டிசம்பர் மாதத்தில், எட்டு டிகிரி குளிரில் எல்லாம் ஷூட்டிங் நடந்துள்ளது. அப்போது என்னை சுற்றியுள்ள அனைவரும் குளிருக்கு அடக்கமாக ஜாக்கெட், மஃப்ளர் எல்லாம் அணிந்து கொண்டிருப்பார்கள். நான் மட்டும் ஒரு பனியன்-லுங்கி அணிந்து கொண்டிருப்பேன். அந்த குளிரில் நடித்தது மிகவும் கஷ்டமா இருந்தது” என நானி அந்த நேர்காணலில் பேசியிருந்தார்.
ஒரே சமயத்தில் வெளியாகும் 4 படங்கள்!
இந்த வார இறுதியில், தசரா படம் மட்டுமன்றி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ள விடுதலை மற்றும் பத்து தல ஆகிய படங்களும் வெளிவருகின்றன. இவை மட்டுமன்றி, கைதி படத்தின் இந்தி ரீமேக் ஆன போலா திரைப்படமும் வரும் 30ஆம் தேதி வெளியாகிறது. கோலிவுட் திரையுலகே பெரிதாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிக்கும் இந்த படங்களை மிஞ்சி தசரா படம் தமிழில் வெற்றி பெறுமா? என்பது பட ரிலீஸிற்கு பின்னர்தான் தெரியும். மேலும், பத்து தல படம் மற்றும் போலா ஆகிய படங்களும் தசரா வெளியாகம் நாளிலே ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.