Marimuthu: 'ஆமா... நான்தான் நம்பர் கொடுத்தேன்.. இதுல என்ன தப்பு..?' சீரியல் நடிகர் மாரிமுத்து ஆவேசம்
பேசலாமான்னு ஒரு பொண்ணு நம்பர் கேட்டதால் கொடுத்தேன் அதில் என்ன தப்பு. யாரு நம்பர் கேட்டாலும் கொடுப்பேன். ட்விட்டர் விவகாரம் குறித்து விளக்கம் அளித்த நடிகர் மாரிமுத்து
தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களான மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து பின்னர் நடிகரானவர் மாரிமுத்து. ஓரிரு திரைப்படங்களையும் இயக்கிய இவர் 'யுத்தம் செய்' திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மாரிமுத்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பிரபலமான ஒரு முகமாக மாறிவிட்ட நடிகர் மாரிமுத்து தற்போது இணையத்தில் ஒரு ட்ரெண்டிங் கன்டென்ட்டாக மாறியுள்ளார். சமீபத்தில் ட்விட்டரில் மாடர்ன் உடை அணிந்த ஒரு பெண் 'Can I Call You' என ட்வீட் செய்ததற்கு 'Yes என சொல்லி அவரின் அலைபேசி நம்பரையும் கொடுத்து இருந்தார். இந்த விவகாரம் சம்பந்தமாக மாரிமுத்துவின் மகன் அகிலன் அது போலியான ட்விட்டர் கணக்கு. அப்பாவின் நம்பர் பல பேரிடம் உள்ளது அதனால் யாரவது அவர் மீது அவதூறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அப்பாவின் நம்பரை ட்விட்டரில் போஸ்ட் செய்துள்ளார்கள் என தெரிவித்தார். இந்த விஷயம் இணையத்தில் ட்ரெண்டிங் நியூஸ்சாக சில தினங்களாக வலம் வருகிறது.
நம்பர் கொடுத்தேன்:
இது குறித்து சமீபத்தில் நடிகர் மாரிமுத்துவுடன் ஒரு நேர்காணல் நடைபெற்றுள்ளது. அதில் அவர் வெளிப்படையாக நடந்ததை பளிச் என கூறியிருந்தார். ட்விட்டர் விவகாரம் குறித்து அவர் கூறுகையில் " ஆம் நான் தான் நம்பரை கொடுத்தேன். ஒரு பெண் உங்களுடன் பேச முடியுமா என கேட்டதால் நான் நம்பர் கொடுத்தேன். அதனால் எனக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் கணக்கான அழைப்புகள் வந்தன. நான் அதை எதையும் எடுப்பதில்லை. இருந்தாலும் அப்படி என்ன தான் கேட்கிறார்கள் என தெரிந்து கொள்வதற்காக ஒரு சில முறை எடுப்பதுண்டு.
இதுல என்ன தப்பு?
போன் செய்துவிட்டு யாரும் பேசமாட்டார்கள். ஒரு சில சமயம் அவன் தாண்டா... அவன் குரல் தான் கேட்குது... அவனே தான் என பேசிக்கொள்வார்கள். அதை கேட்டதும் மோசமான வார்த்தைகளால் திட்டி வைத்துவிடுவேன். அவர்களின் லெவல் அவ்வளவு தான். பேசமுடியாத முதுகெலும்பு இல்லாதவன் கிட்ட எல்லாம் என்ன பேச முடியும். அது ஒரிஜினல் ட்விட்டர் ஐடி தானா அல்லது போலியான ஐடி என்பது பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை பயமும் இல்லை. பேசலாமான்னு ஒரு பொண்ணு நம்பர் கேட்டதால் கொடுத்தேன் அதில் என்ன தப்பு. யாரு நம்பர் கேட்டாலும் கொடுப்பேன். நம்பரை வைத்து என்ன பண்ணிவிட முடியும். போன் பண்ணுவான பண்ணட்டும். எத்தனை நாளைக்கு பண்ணுவான். இதன் மூலம் என்னுடைய போன் நம்பர் உலகெங்கிலும் பரவுகிறது என்றால் சந்தோஷம் தானே" என மிகவும் கூலாக பதில் அளித்தார்.
மேலும் ஒரு மகனாக தனது தந்தைக்கு எந்த இடத்திலும் கெட்ட பெயர் வந்து விட கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான் என் மகன் அப்படி செய்து விட்டான் என மகன் கொடுத்த விளக்கம் குறித்து பதிலளித்தார்.