Rajinikanth: ’ரஜினி சூப்பர் ஸ்டாரா?’ .. ’தமிழ்நாட்டோட மானமே போச்சு’ .. கிழித்து தொங்கவிட்ட மன்சூர் அலிகான்..!
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்து ஆசி பெற்றதை நடிகர் மன்சூர் அலிகான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்து ஆசி பெற்றதை நடிகர் மன்சூர் அலிகான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ரஜினியின் இமயமலை பயணம்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரஜினிகாந்த் நடிப்பில் “ஜெயிலர்” படம் வெளியானது. அதற்கு முந்தைய நாள் (ஆகஸ்ட் 9) 4 ஆண்டுகளுக்குப் பின் அவர் இமயமலை கிளம்பினார். வழக்கமாக தனது ஒவ்வொரு படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு இமயமலை செல்வதை வழக்கமாக கொண்ட ரஜினி இம்முறை ஜெயிலர், லால் சலாம் ஷூட்டிங், ஜெயிலர் இசை வெளியிட்டு விழா என அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் இருந்ததால் உடனடியாக இமயமலை செல்லாமல் இருந்தார்.
கிட்டதட்ட ஒருவாரம் கழித்து இமயமலை பயணம் முடித்துக் கொண்டு ரஜினி நேராக ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலரையும் சந்தித்தார்.
யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த ரஜினி
இதில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க சென்ற ரஜினி, சற்றும் எதிர்பாராத விதமாக அவர் காலில் விழுந்து ஆசி பெற்றது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.72 வயதான ரஜினி, தன்னை விட 20 வயது குறைந்த யோகி ஆதித்யநாத் காலில் விழலாமா? என சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை திரும்பிய ரஜினி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது யோகி காலில் விழுந்தது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘‘வயதில் குறைவானவராக இருந்தாலும் யோகி, சன்யாசி ஆகியோர் காலில் விழுவது என் வழக்கம். அதைத்தான் நான் செய்தேன்’ என விளக்கம் கொடுக்க இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.
கடுப்பான மன்சூர் அலிகான்
இதனிடையே நடிகர் சந்தானம் நடித்துள்ள ‘கிக்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் மன்சூர் அலிகானிடம், ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ”அது தவறு. ரொம்ப கேவலாமா இருந்துச்சு. நான் ரஜினியை பற்றி பேசவில்லை. ஒரு ரவுடி, பயங்கரமான கிரிமினல்கள் அவர் பக்கத்துல உட்கார்ந்து இருக்காங்க. தமிழ்நாட்டோட மானம் மரியாதையே போச்சு. ஒரு 2 நாள் முன்னாடி போய் பார்த்த பின் ஜெயிலர் படம் வெளியாகியிருந்தால் கண்டிப்பாக படம் ஓடியிருக்காது. அவர் வயதானவர், ரஜினியைப் பற்றி பேசி என்னவாக போகிறது” என பதிலளித்தார்.
தொடர்ந்து, அது என்னோட பழக்கம், காலில் விழுவது எந்த தவறும் இல்லை என ரஜினி விளக்கம் கொடுத்தாரே.. அது பற்றி உங்க கருத்து என்ன? என கேட்கப்பட்டது. இதற்கு, ”பைத்தியக்காரத்தனமா இல்லையா?, தமிழன் என்றால் முட்டாளா? .. வாழ்க்கையில வலதுசாரியா வாழ்ந்துகிட்டு சினிமாவுல இடதுசாரியா பண்ணிகிட்டு இருக்காரு. தமிழ்நாட்டு மக்கள் அந்த அளவுக்கு முட்டாள் இல்ல. அவரோட மாண்புக்கு அது சரியில்ல” என மன்சூர் அலிகான் கூறினார்.
பின்னர் சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பான சர்ச்சை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கோபமான மன்சூர் அலிகான், ’இந்த சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றியெல்லாம் என்னிடம் பேசாதீங்க.. ஒரே சூப்பர் ஸ்டார் என்றால் அது எம்ஜிஆர் மட்டும் தான்” என தெரிவித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.