மன்சூர் அலிகான் மகனுக்கு ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம்
போதைப் பொருள் பயண்படுத்திய குற்றத்திற்காக கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டார் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக். தற்போது சென்னை உயர் நீதிமன்றம் அவரை நிபந்தனை ஜாமீனில் விடுவித்துள்ளது.
போதைப் பொருள் பயண்படுத்தியதற்காக கைது
சென்னை போதைப் பொருள் தடுப்பு பிரிவு கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி மன்சூர் அலி கானின் மகன் துக்ளக் கானை கைது செய்தது .ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கல்லூரி மாணவர்கள் 5 பேர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் பதிவான எண்களை கொண்டு விசாரணை நடைபெற்றது. இதனடிப்படையில் தான் பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் போலீசில் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது செல்போனில் அவர் போதை பொருள் பயன்படுத்தியது தொடர்பான வீடியோக்கள் சிக்கியது.
அவருடன் சேர்ந்து 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை போலீசார் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 18ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மருத்துவ பரிசோதனையில் துக்ளக் கஞ்சா பயண்படுத்தியது உறுதிசெய்யப்பட்டது.
அவருக்கு ஜாமீன் கோரி முன்னதாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தற்போது சென்னை உயர் நீதிமன்றம் அவரை நிபந்தனை ஜாமீனில் விடுவித்துள்ளது.