Legend Saravanan: கருடன் பட இயக்குநருடன் இணைந்த லெஜண்ட் சரவணன்.. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!
அருள் சரவணன், தனது அடுத்தப்படத்தில் கருடன் படத்தை இயக்கிய துரை செந்தில்குமாருடன் இணைந்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தொழிலதிபர் அருள் சரவணன் ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜவுளி, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களில் மிக முக்கியமானது தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ். இதன் நிறுவனரான அருள் சரவணன், தொழில் உலகில் யாருமே செய்த சம்பவம் ஒன்றை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செய்தார். பிரபலங்களை வைத்து தங்கள் நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்யும் உரிமையாளர்களுக்கு மத்தியில் தானே அந்த விளம்பரத்தில் தோன்றி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
தமிழக மக்களிடையே நன்கு பரீட்சையமான அருள் சரவணன், தோற்றம், வயது,விமர்சனங்கள் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் விளம்பரங்களில் தோன்றினார். இதனைத் தொடர்ந்து அவருக்கு சினிமா ஆசையும் ஏற்பட்டது. சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களை இயக்கும் இரட்டை இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரி தான் அருள் சரவணனின் முதல் படத்தை இயக்கினர். “தி லெஜண்ட்” என பெயரிடப்பட்ட அப்படத்தில் ஊர்வசி ரவுதாலா, விவேக், பிரபு, சுமன் என பலரும் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.
#shootingmode #mynext #legendsaravanan #kickstarted pic.twitter.com/v3OKB3Fjdk
— durai senthilkumar (@Dir_dsk) June 24, 2024
இப்படம் தோல்வியடைந்தாலும், அருள் சரவணனின் முயற்சி வெற்றியடைந்ததாகவே பார்க்கப்பட்டது. இதனிடையே ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அவரின் அடுத்தப்படம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி, பட்டாஸ் படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் இயக்கத்தில் தான் அருள் சரவணன் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இவர் தான் சமீபத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி பிரியதர்ஷன் ஆகியோர் நடிப்பில் வெளியான ”கருடன்” படத்தை இயக்கியிருந்தார்.
இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் துரை செந்தில்குமார் முன்னணி நடிகர்களுடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அருள் சரவணனுடன் இணைந்துள்ளது தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது. இந்த படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.