Kamalhassan: என்னுடைய அரசியல் எதிரி "சாதி" - ரஞ்சித்தின் நீலம் அமைப்பின் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேச்சு..!
என்னுடைய முக்கியமான அரசியல் எதிரி என்பது சாதி தான் என நீலம் பண்பாட்டு மைய புத்தக விற்பனை நிலையத்தின் திறப்பு விழாவில் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
என்னுடைய முக்கியமான அரசியல் எதிரி என்பது சாதி தான் என நீலம் பண்பாட்டு மைய புத்தக விற்பனை நிலையத்தின் திறப்பு விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம்:
அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான பா.ரஞ்சித் தனது ஒவ்வொரு படைப்புகளின் வாயிலாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பதை மிக அழுத்தமாக பேசி வருகிறார். அதுமட்டுமல்லாமல் தனது நீலம் பண்பாட்டு மையத்தின் வாயிலாக பல சமுதாய பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக சென்னை எழும்பூர் பகுதியில் நீலம் பண்பாட்டு மையத்தின் புத்தக விற்பனை நிலையத்தை பா.ரஞ்சித் தொடங்கியுள்ளார்.
இதற்காக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனை நேரில் சந்தித்து இயக்குநர் பா.ரஞ்சித் அழைப்பு விடுத்த புகைப்படம் நேற்று இணையத்தில் வைரலானது. ஆனால் விக்ரம் பட விழாவில் கமலை வைத்து படம் இயக்கவுள்ளதாக பா.ரஞ்சித் தெரிவித்திருந்தார். நேற்று புகைப்படம் வெளியான நிலையில், அடுத்த படம் குறித்து தான் சந்திப்பு நிகழ்ந்ததாக தகவல் வெளியானது. இதன் பின்னர் ட்விட்டரில் புத்தக மைய திறப்பு விழா அழைப்பிதழை வெளியிட்டு வைரலான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
Please Join us in the launch of our Neelam Bookstore tomorrow ( 12.02.2023) Thank you @ikamalhaasan sir for accepting the invite for the event! pic.twitter.com/jDo1zECbXC
— pa.ranjith (@beemji) February 11, 2023
சாதிதான் எதிரி:
இந்நிலையில் நீலம் பண்பாட்டு மையத்தின் புத்தக விற்பனை நிலையத்தை கமல்ஹாசன் இன்று திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், உயிரே..உறவே..தமிழே இதுதான் வாழ்வின் உண்மை தத்துவம். அரசியல் மற்றும் கலாச்சாரத்தையும் தனியாக வைத்திருக்க கூடிய சூழ்நிலையில் இருக்கிறோம் என்றும், நாம் உருவாக்கியது தான் அரசியல்.. ஆள்பவர்கள் என்ற வார்த்தையே இருக்கக்கூடாது என நினைக்கிறோம். நாம் நியமித்தவர்கள் அவர்கள் என்ற எண்ணம் மக்களுக்கும் வரும் போது ஜனநாயகம் நீடுடி வாழும்.
ஒவ்வொருவரும் தன்னளவில் தலைவன் என்று நினைக்கும் பட்சத்தில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக மாறும். தன்னுடைய முக்கியமான அரசியல் எதிரி என்பது சாதி. அதை அரசியலில் இருந்து நீக்க வேண்டும் என்பது அம்பேத்கர் தொடங்கி சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நடந்த பாடில்லை. அந்த தொடர் போராட்டத்தின் நீட்சித்தான் நீலம் பண்பாட்டு மையம் என்றும் தெரிவித்தார்.