‛5 ஆடிஷன் நடத்தி எடுத்தார்கள்... ஆனால் படத்தில் என் காட்சியை காணாம்’ நடிகர் காளி வெங்கட் வருத்தம்!
மணிரத்னம் சார் ஒரு தீவு! அந்த தீவுக்குள் நாம் போக முடியும்; ஆனால் அந்த தீவு நம்மிடத்தில் வாராது. நாம் அந்த தீவுக்குள் போகலாம், ரசிக்கலாம், வசிக்கலாம்; ஆனால் திரும்பி நம்மிடத்திற்கு வந்து விடுவோம்..
டான், சூரரைப் போற்று, சார்பட்டா பரம்பரை, இறுதிச்சுற்று, இறைவி போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார் நடிகர் காளி வெங்கட். இவர் ஒரு தனியார் சேனலுக்கு அளித்த நேர்காணலில் அவருடைய மறக்க முடியாத ஆடிஷன் குறித்து பேசி இருக்கிறார். நடிகர் காளி வெங்கட்டின் மறக்க முடியாத ஆடிஷன் என்றால் கடல் திரைப்படம் தானாம்.
கடல் திரைப்படத்தில் இவர் நடித்தாரா என்ற கேள்வி எழுகிறது அல்லவா! அது குறித்து அவர் கூறுகையில், நான் கடல் திரைப்படத்தில் நடித்திருந்தேன். ஆனால் என்னுடைய சீன் படத்தில் இல்லை. ஆனால் ரோலிங் டைட்டிலில் என் பெயர் இருக்கும். அது என்னால் மறக்க முடியாத அனுபவம். அந்த திரைப்படத்திற்காக நான்கு ஐந்து முறை ஆடிஷன் பண்ணியிருக்கேன். வானம் கொட்டட்டும் திரைப்படத்தின் இயக்குநர் தனசேகரன் தான் என்னை ஆடிசன் செய்தார்.
மூன்று சீன்களில் நான் நடித்திருந்தேன். டப்பிங் கூட பேசியிருந்தேன். அதனால் அது படத்தில் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். படம் வெளியான சமயத்தில் நான் கோபிசெட்டிபாளையத்தில் ஷூட்டிங்கில் இருந்தேன். நானும் சக நடிகர்கள் சிலரும் கடல் திரைப்படம் பார்ப்பதற்காக டிக்கெட் எடுத்துக்கொண்டு தியேட்டரில் சென்று உட்கார்ந்து இருந்தோம். படம் பார்த்தால் நான் நடித்த சீன் அதில் இல்லை; இப்போது வந்துவிடும் அப்புறம் வந்துவிடும் என்று பார்த்துக் கொண்டே இருந்தேன். ஆனால் வரவில்லை… நான் இருந்த பேக்ரவுண்ட் அங்கே இருந்தது. அப்போதுதான் புரிந்தது நான் நடித்த சீன் கட் ஆகிவிட்டது என்று! அப்போது கொஞ்சம் மன வருத்தமாக இருந்தது. இருந்தாலும் நல்ல அனுபவம் என்று நினைத்துக் கொண்டேன்.
மணிரத்னம் சார் ஒரு தீவு!
மணிரத்னம் சாருடன் ஒரு 25 நாட்கள் பயணம் செய்தேன்.அவரை வேடிக்கை பார்ப்பது என்பதே ஒரு பெரிய அனுபவம் தானே… மணிரத்னம் சார் ஒரு தீவு! அந்த தீவுக்குள் நாம் போக முடியும்; ஆனால் அந்த தீவு நம்மிடத்தில் வாராது. நாம் அந்த தீவுக்குள் போகலாம், ரசிக்கலாம், வசிக்கலாம்; ஆனால் திரும்பி நம்மிடத்திற்கு வந்து விடுவோம்..அதுபோல்தான்.. மணிரத்னம் சார் என்ற தீவை அடைவது என்பது ஒரு பெரிய விஷயம் தானே… அந்த தீவில் நான் 25 நாட்கள் வாழ்ந்திருக்கிறேன் என்பது எனக்கு மறக்க முடியாத அனுபவம்.
டிசிப்ளின் என்றால் மணி சார் தான்!
மணி சார் படத்தின் சூட்டிங் ஸ்பாட் டிசிப்ளினாக இருக்கும். மற்ற ஷூட்டிங் ஸ்பாட்டை விட பயங்கரமாக இருக்கும். தினமும் அட்டண்டன்ஸ் நோட்டில் அனைவரும் கையெழுத்திட வேண்டும். அசிஸ்டன்ட் டைரக்டர்கள், கேமரா மேன்கள், கலை இயக்குநர்கள் எல்லோரும் டைம் போட்டு சைன் பண்ணிவிட்டு தான் ஷூட்டிங் போவோம். எல்லா சூட்டிங்களிலும் நாம் முதலில் போய் இருப்போம், பின்னர் டைரக்டர் வரும்பொழுது வணக்கம் வைப்போம். ஆனால் மணி சாருக்கு வணக்கம் வைக்கவே முடியாது. ஏனென்றால் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும் முதல் ஆளே மணிரத்னம் சார் தான். அவர் அங்கேயே தங்கி விடுகிறாரா என்ற எண்ணம் நமக்குத் தோன்றும். அவரை போல் டிசிப்ளினாக இருக்க முடியாது. அந்த டிசிப்ளின் தான் அவரை இன்று வரை அதே கம்பீரத்துடன் இருக்க வைக்கிறது. அவரது நிலைப்பாட்டிற்கும் உயர்வுக்கும் காரணம் அவரது டிசிப்ளின் தான் என்று நான் நினைக்கிறேன். அவரது சூட்டிங் ஸ்பாட் மிகவும் அமைதியாக இருக்கும்.
சார் படம் எல்லா படத்திலும் கோல்டன் லைட்டை பார்க்கலாம். அதை மிஸ் பண்ணாமல் எல்லா படத்திலும் எடுத்து விடுவார். கடல் படத்தின் சூட்டிங்கின் போது எல்லா நாளும் சூரிய உதயத்தில் தொடங்கி சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு தான் வீட்டிற்கு வருவோம் என நடிகர் காளி வெங்கட் இயக்குநர் மணிரத்னத்துடன் தனது அனுபவம் குறித்து கூறியுள்ளார்.