HBD Jiiva : தமிழ் சினிமாவின் செல்லப்பிள்ளை.. நடிகர் ஜீவாவின் பிறந்தநாள் இன்று...!
திரை பிரபலத்தின் வாரிசு என்ற ஒரே முத்திரை மட்டுமே இருந்தால் சினிமாவில் ஜெயித்து விடலாம் என்ற மூட நம்பிக்கையை உடைத்து சிறப்பான நடிப்பு இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என சாதித்து காட்டியவர் ஜீவா...
திரையுலகில் நடிகராக என்ட்ரி கொடுத்த அனைவருமே வெற்றி பெற்றதில்லை. குறிப்பாக வாரிசு நடிகர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். திரை பிரபலத்தின் வாரிசு என்ற ஒரே முத்திரை மட்டுமே இருந்தால் சினிமாவில் ஜெயித்து விடலாம் என்ற மூட நம்பிக்கையை உடைத்து சிறப்பான நடிப்பு இருந்தால் மட்டுமே இந்த காலத்தில் ஜெயிக்க முடியும் என சாதித்து காட்டியவர் நடிகர் ஜீவா. இன்று இந்த கலகலப்பு நாயகனின் 39வது பிறந்தநாள். ஹேப்பி பர்த்டே ஜீவா !!!
தமிழ் சினிமாவில் ஏராளமான தரமான வெற்றிப்படங்களை தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான ஆர்.பி.செளத்ரியின் மகன் என்ற முத்திரையோடு இளம் நடிகராக அடியெடுத்து வைத்தவர் நடிகர் ஜீவா. அப்படி ஒரு பிரபலத்தின் மகன் என்பதால் தான் ஜீவா ஜெயித்தார் என்றால் அதே குடும்பத்தில் இருந்து வந்த நடிகர் ஜித்தன் ரமேஷ் இருந்த இடமே தெரியாமல் திரும்பினார். ஆக நடிகர் ஜீவா இன்றும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பதற்கு முக்கியமான காரணமாக அவரது நடிப்பு, விடாமுயற்சி மற்றும் கடினமான உழைப்பு தான்.
2003ம் ஆண்டு வெளியான 'ஆசை ஆசையாய்' திரைப்படம் மூலம் ஒரு பிளேபாயாக சினிமாவில் நுழைந்த ஜீவாவிற்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது ராம் திரைப்படம். இப்படத்தில் அவரின் சிறப்பான நடிப்பிற்காக சைப்ரஸ் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு இந்த விருதை பெற்ற தென்னிந்திய நடிகர் ஜீவா என்பது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து கற்றது தமிழ், அரண், கோ, டிஷ்யூம், ஈ, சிவா மனசுல சக்தி, ரௌத்திரம், முகமூடி, நீதானே என் பொன்வசந்தம் என அடுத்தடுத்து அவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் படங்களாக வெற்றிபெற்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஹிட் படம் கொடுத்து தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகர் என்ற இமேஜை தக்க வைத்து கொண்டார். அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசத்தை காட்டியது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
1983ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் சரித்திரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட 83 திரைப்படத்தில் நடிகர் ஜீவா கிரிக்கெட் வீரர் ஶ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருந்தார். இப்படம் மூலம் ஒரு பான் இந்தியன் ஆர்ட்டிஸ்ட் என்ற பெருமையையும் பெற்றார் நடிகர் ஜீவா.
சமீப காலமாக மல்டி ஸ்டார் நடிகர்களின் படங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டு இருக்கிறார். அப்படி வெளியான நண்பன், கலகலப்பு 2 , என்றென்றும் புன்னகை முதல் தற்போது வெளியான சுந்தர்.சியின் 'காபி வித் காதல்' திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. பல படங்கள் சற்று சொதப்பினாலும் இன்றும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் ஜீவன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் காபி வித் காதல் மற்றும் வரலாறு முக்கியம் திரைப்படம். இந்த இரு படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 20 வருடங்களில் எத்தனையோ நடிகர்கள் திரைத்துறையில் நுழைந்து இருந்தாலும் பலரும் காணாமல் போயிருக்கிறார்கள். அப்படி இருக்கையில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு இன்றும் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகர் ஜீவாவின் திரை பயணம் நிச்சயம் ஒரு வெற்றிப்பயணம்.
ஒன்ஸ் மோர் ஹேப்பி பர்த்டே ஜீவா !!!