15 Years of SMS: காதலர்களின் ஜாலியான மோதல்..15 ஆண்டுகளை நிறைவு செய்த சிவா மனசுல சக்தி..!
90ஸ் கிட்ஸ்களுக்கு மீண்டும் ஒரு யூத் ஃபுல்லான அந்த காலக்கட்டத்துக்கு ஏற்றவாறு கதையை உருவாக்கி தனது அறிமுக படத்திலேயே கவர்ந்தார் இயக்குநர் ராஜேஷ்.
தமிழ் சினிமாவின் முக்கியமான காதல் படங்களில் ஒன்றான “சிவா மனசுல சக்தி” படம் வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இயக்குநர் ராஜேஷ் - ஜீவா கூட்டணி
கடந்த 2000 ஆம் ஆண்டு விஜய், ஜோதிகா நடிப்பில் “குஷி” படம் வெளியாகி சூப்பரான வெற்றியைப் பெற்றது. இருவருக்குள்ளான ஈகோ மோதல் காதலாக மாறுவது பற்றிய கதைக்களத்தை அடிப்படையாக கொண்ட இப்படம் ரசிகர்களின் பேவரைட் படங்களில் ஒன்றாக உள்ளது. அந்த வகையில் அமைந்தது தான் ‘சிவா மனசுல சக்தி’ படம்.
90ஸ் கிட்ஸ்களுக்கு மீண்டும் ஒரு யூத் ஃபுல்லான அந்த காலக்கட்டத்துக்கு ஏற்றவாறு கதையை உருவாக்கி தனது அறிமுக படத்திலேயே கவர்ந்தார் இயக்குநர் ராஜேஷ். சிவா மனசுல சக்தி படத்தை விகடன் நிறுவனம் தான் தயாரித்தது. இப்படத்தில் ஜீவா, அனுயா, சந்தானம், ஊர்வசி, பேராசிரியர் ஞானசம்பந்தம் என பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
மோதல் - காதல்
சிவா மனசுல சக்தி படம் ஆரம்பம் முதலே ஒரு ஜாலியான மோடில் தான் பயணிக்கும். முதல் காட்சியில் கோவையில் இருந்து சென்னைக்கு ஒரே ரயிலில் பயணிக்கும் ஜீவா, அனுயா இருவரும் அறிமுகமாகின்றனர். இதில் ஜீவா தன்னை ஒரு ராணுவ வீரன் என்றும், அனுயா தான் ஒரு விமான பணிப்பெண் என்றும் சொல்லிக் கொள்வார்கள். அடுத்த சில காட்சிகள் உண்மை வெளிப்படும். இருவருக்குள்ளும் பயங்கரமான ஈகோ பற்றிக் கொள்ளும். ஆனாலும் ஒரு பிடிப்பு இருந்துக் கொண்டே இருக்கும்.
இது காதலாக மாறும் இடமும் சரி, மோதலாக வெடிக்கும் இடமும் சரி ரசிகர்களை ஜாலி மோடில் வைத்திருந்தது. சிவாவாக வரும் ஜீவாவும், சக்தியாக வரும் அனுயாவும் நடிப்பில் ஸ்கோர் செய்திருப்பார்கள்.
SMS is not a movie; it's a vibe♥️#SivaManasulaSakthi pic.twitter.com/WqobSGSFAt
— Subash | Lax stan (@iamtheSubash) July 16, 2021
பலமாக அமைந்த சந்தானம் காமெடி
நண்பனால் ஏற்படும் தொல்லையை பொறுத்து அவரோடு எல்லா நிலையிலும் பயணிக்கும் நபராக சந்தானம் காமெடியில் பின்னியிருப்பார். இப்படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சி, நல்லவங்க பேச்சு ரீச் ஆகும்.. என்ன கொஞ்சம் லேட் ஆகும், மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன், அவ போய் ஆறு மாசம் ஆகுது என அத்தனை டயலாக்குகளும் மனப்பாடமாக அமைந்தது.
படத்தின் மற்றொரு ஹீரோ யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும், நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளும் தான். காதலர்களின் சோக கீதமாக அமைந்த “ஒரு கல் ஒரு கண்ணாடி” பாடல் என்றைக்குமான அருமருந்து தான். இந்த படத்தில் நடிகர் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அந்த காட்சி தான் படத்தின் மிக முக்கியமான திருப்புமுனையாகவும் இருந்தது. சமீபத்தில் இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட இப்படத்தை காண அலைமோதியவர்கள் அதிகம். அப்படிப்பட்ட நிலையில் இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் சிவா மனசுல சக்தி காதலின் ஸ்பெஷல் படமாக இருக்கும்..!