இதெல்லாம்தான் உன் எதிர்காலத்தை உருவாக்கப்போகுது!’ - ஷாருக்கான் மகனுக்கு கடிதம் எழுதிய ஹ்ரித்திக் ரோஷன்
போதை மருந்து வழக்கில் கைதாகியுள்ள நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான் தற்போது போதை மருந்துத் தடுப்புப் பிரிவின் காவலில் உள்ளார். அவருக்கு ஆதரவாக நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
போதை மருந்து வழக்கில் கைதாகியுள்ள பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான் தற்போது போதை மருந்துத் தடுப்புப் பிரிவின் காவலில் உள்ளார். அவருக்கு ஆதரவாக நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளதோடு, அதில் `பிரச்னைகளுக்கு நடுவே அமைதியை நாடு’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 4 அன்று, மும்பையில் சொகுசு கப்பல் ஒன்றில் பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான் போதை மருந்துத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவரோடு இருந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்யன் கானுக்கு நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட மறுக்கப்பட்டதோடு, போதை மருந்துத் தடுப்புப் பிரிவின் காவலில் வைக்கப்பட உத்தரவிடப்பட்டது. ஆர்யன் கானின் தரப்பில், அவர் சொகுசு கப்பலுக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டதாகவும், அவருக்கு போதை மருந்து இருந்தது தெரியாது எனவும் கூறப்பட்டது.
ஷாரூக் கானின் குடும்பத்திற்கு ஆதரவாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் ஹன்சல் மேத்தா, நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், நடிகர் ஹ்ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சுஸான் கான் முதலானோர் ஷாரூக் கானுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram
இந்நிலையில் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ஆர்யன் கானுக்குக் கடித வடிவில் ஆறுதல் கூறி, தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், `என் பிரியத்திற்குரிய ஆர்யன், வாழ்க்கை என்பது வினோதமான பயணம். அதில் நடக்கப் போவதைத் தெரிந்துகொள்ள முடியாது என்பதால் அது சிறப்பாக இருக்கிறது. வாழ்க்கை நம் மீது நாம் எதிர்பார்க்காதவற்றை வீசினாலும், கடவுள் அன்புடையவர். வலியோருக்குத் தான் கடவுளிடம் இருந்து அதிக வலி கிடைக்கும். இத்தனை பிரச்னைகளுக்கு நடுவில் நீயே உன்னைத் தாங்கிப் பிடிக்கும் போதுதான், நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்பதை உணர்வாய். நீ அதனை உணர்ந்துகொண்டிருப்பாய் என்று எனக்குத் தெரிவும். கோபம், குழப்பம், கையறுநிலை.. ஆஹா.. உன்னில் இருக்கும் ஹீரோவை உருவாக்குவதற்குத் தேவையான பொருள்கள் உன்னிடம் இருக்கின்றன. ஆனால் கவனம்! இதே பொருள்கள் நல்லவையான அன்பு, கருணை, பாசம் ஆகியவற்றை எரித்துவிடும் அபாயமும் இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து ஹ்ரித்திக் ரோஷன் தவறுகள், வெற்றிகள், தோல்விகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, `உனது அனுபவத்தில் இருந்து இவற்றுள் எவற்றை உன்னுடன் வைத்துக் கொள்ளலாம், எவற்றைத் தூக்கி எறியலாம் என்பதை நீ தெரிந்துகொண்டால் இவை அனைத்து ஒன்றே. ஆனால் இவை அனைத்தையும் வைத்துக் கொண்டால் நீ இன்னும் சிறப்பானவனாக வளர முடியும் என்பதைத் தெரிந்துகொள். உன்னைக் குழந்தையாக நான் அறிவேன்.., உன்னை வளர்ந்த ஆண்மகனாகவும் நான் அறிவேன்.. நீ அனுபவிக்கும் அனைத்தையும் உனக்கானதாக மாற்றிக் கொள். இவை உன்னுடைய பரிசுகள். பொறுமையாக இரு.. சுற்றி நிகழ்வதைக் கவனி.. உன்னுடைய நாளையை உருவாக்கும் நிகழ்வுகள் இவை.. உன்னுடைய நாளைகளில் சூரியன் இன்னும் பிரகாசமாக ஒளி தரும்.. ஆனால் அதனை நீ அனுபவிக்க வேண்டுமெனில், நீ இருட்டில் பயணிக்க வேண்டும்.. பொறுமையாக இரு.. உன்னை நீ நம்பு.. உனக்குள் இருக்கும் ஒளியை நம்பு.. லவ் யூ மேன்’ என்று ஆர்யன் கானுக்கு ஆறுதலாகப் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ஹ்ரித்திக் ரோஷனின் இந்தக் கடிதம் வைரலாகி வருகிறது.