Samuthirakani Birthday: அட்வைஸூம் கொடுப்பாரு.. அழகாவும் நடிப்பாரு.. சமுத்திரகனியின் பிறந்தநாள் இன்று!
நடிகர் , இயக்குநர் என பன்முகத்தன்மைக் கொண்ட கலைஞர் சமுத்திரகனி இன்று தன் 51 ஆவது வயதை எட்டுகிறார்
சமுத்திரக்கனி
இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் 100 ஆவது படமான பார்த்தாலே பரவசம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் சமுத்திரக்கனி. தொடர்ந்து கே.பாலச்சந்தர் இயக்கிய ராஜ் டிவியில் ஒளிபரப்பான குறுந்தொடர்களிலும் பணியாற்றியுள்ளார். சன் டிவியில் மெகாத்தொடர்களாக ஒளிபரப்பான செல்வி , அரசி ஆகிய தொடர்களை இயக்கிய சமுத்திரக்கனி 2003 ஆம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஆனால் சமுத்திரக்கனிக்கு மிகப்பெரிய அடையாளம் கொடுத்த படம் என்றால் 2009 ஆம் ஆண்டு வெளியான நாடோடிகள் படம்.
எதார்த்தமாக கதை சொல்லும் இயக்குநர்
பொதுவாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் இயக்குநர்களிடம் சொல்லப்படும் ஒரு குறை சீரியல்களைப் போல் அதிகப்படியான நாடகத்தன்மையை அவர்களின் படங்கள் கொண்டிருக்கும். சமுத்திரக்கனியின் படங்களில் நாடகத்தன்மை ஓங்கி இருந்தாலும் அவற்றை எதார்த்தமாக அவர் கையாண்டிருப்பதே அவரது படங்களுக்கு ஒரு விதமான உண்மைத் தன்மையை அளிக்கும். நட்பு, சமூகத்தின் மீதான ஒரு சாமானியனின் கோபம் ஆகியவை அவரது படங்களில் கதைக்களங்களாக இருக்கின்றன. அதீத திரைக்கதை நுண் உணர்வுகளோ மாஸ் காட்சிகளோ இல்லாமல் எளிய கதைகளை வைத்து தனது ரசிகர்களுடன் ஏதாவது ஒரு வகையில் உரையாடும் முயற்சியாக அவரது படங்களைப் பார்க்கலாம்.
மதுரைக்காரனும் வடசென்னைக்காரனும்
ஒரு இயக்குநராக சமுத்திரக்கனி முதன்மையாக அறியப்பட்டாலும் அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதே உண்மை. இதை விட எதார்த்தமாக ஒருவரால் நடிக்கவே முடியாது என்கிற அளவிற்கு சுப்ரமணியபுரம் படத்தில் அவரது கேரக்டருடன் ஒன்றியிருப்பார். மதுரைக்காரனாக சுப்ரமணியபுரம் என்றால் வடசென்னைக் காரனாக வடசென்னை படத்தில் இன்னொரு முகம்.
இதற்கு நடுவில் விசாரணை படத்தில் காவல் அதிகாரியாக , வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒரு மிடில் கிளாஸ் அப்பாவாக , காலா படத்தில் எப்போதும் குடித்துக் கொண்டிருக்கும் நகைச்சுவை நடிகராக , ரஜினி முருகன் படத்தில் எரிச்சல் படுத்தும் ஏழரை மூக்கனாக , சாட்டை படத்தில் பொறுப்புள்ள ஆசிரியராக என ஒரே மனிதர் நல்லவன் கெட்டவன் என்கிற இருவேறு துருவங்களில் இருக்கும் பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஆனால் ஒவ்வொரு படத்திலும் அந்த கதாபாத்திரத்தின் எதார்த்த முகம் ஒன்றை எடுத்து மாட்டிக்கொண்டு நம்மை அப்படியே நம்பவைத்துவிடுகிறார். 50 க்கும் மேற்பட்ட படங்களில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். படம் நன்றாக இருக்கோ இல்லையோ அவரது நடிப்பில் எந்த குறையும் நம்மால் சொல்லிவிட முடியாது.
சமுத்திரக்கனி நடிப்பு மட்டுமில்லை அவரது குரல் ஒன்றே நம் மனதில் ஆழமாக பதிந்துவிடும் தன்மைக் கொண்டது. ஆடுகளம் படத்தில் கிஷோர் கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்தது சமுத்திரக்கனியின் குரல்தான். சுந்தர பாண்டியன் படத்தின் ஆரம்ப காட்சிகளை தொடங்கி வைப்பது அவரது குரல்தான். இப்படி பல பரிமாணமங்களைக் கொண்ட சமுத்திரக்கனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.