Dhanush Speech : துரோகம் பழகிடுச்சு..களத்துல நம்ம பசங்கதான்..இட்லி கடை தனுஷ் மாஸ் பேச்சு
Danush Speech :

இட்லி கடை ஆடியோ லாஞ்ச்
டான் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. ராஜ்கிரண் , நித்யா மேனன் , அருண் விஜய் , ஷாலினி பாண்டே , சமுத்திரகனி , சத்யராஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இட்லி கடை படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் நடிகர் தனுஷ் பேசியதாவது
ஜி.வி பிரகாஷ் பற்றி தனுஷ்
ஜி வி பிரகாஷ் மாதிரி ஒரு நண்பன் கிடைப்பது வரம். இந்த படத்திற்காக ரீல்ஸில் வைரலாவதற்காக பாட்டு போட மாட்டேன் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். டிரெண்டிங்கான பாடல்களை யார் வேண்டுமானால் போடலாம். ஆனால் ஜிவி நிலைத்து நிற்க கூடிய மெலடி பாடல்களை உருவாக்க விரும்பினார். இன்றைய சூழலில் பாடல்கள் மொத்தமாக மாறிவிட்டன. கோடிக்கணக்கான பாடல்கள் நம்மிடம் இருக்கின்றன. அடுத்த தலைமுறைக்கு தரமான இசையை நாம் வழங்க வேண்டும் . சாய் அப்யங்கர் நீங்கள் சிறப்பாக இசையமைக்கிறீர்கள். நல்ல தரமான பாடல்களை கொடுங்கள். பொதுவாக படத்திற்கு நாயகனின் பெயரை தான் டைட்டிலாக வைப்பார்கள். என்னுடைய சின்ன வயது அனுபவங்களை வைத்தும் நான் பார்த்த நிஜ மனிதர்களை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். அப்படி உருவானது தான் இட்லி கடை. என் சின்ன வயதில் நான் பூக்களை பறித்து அதில் கிடைக்கும் காசில் வாங்கி சாப்பிட்ட இட்லியின் ருசி இன்று நான் எவ்வளவு பெரிய ரெஸ்டாரண்டில் சாப்பிட்டாலும் கிடைக்கவில்லை.
நாம் நம்முடைய வேர்களையும் வரலாறையும் எப்போதும் மறக்கக் கூடாது. இட்லி கடை படம் அதைப் பற்றிதான் பேசுகிறது. இதை ஒரு மெசேஜாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களிடம் இதை சொவதற்கான உரிமை எனக்கிருக்கிறது என்று நினைக்கிறேன். என்னை படங்களில் மட்டும் பார்த்து ரசியுங்கள். மற்ற நேரம் உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சமீப காலங்களில் நான் டாக்டர் , இஞ்சினியர் , வக்கீல் என நிறைய ரசிகர்களை சந்தித்து வருகிறேன். எனக்கு அதுதான் வேண்டும். உங்களுடைய வாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள். " என தனுஷ் பேசினார்
தன்னுடைய ஹேட்டர்ஸ் குறித்து கேட்டபோது " அப்படி எல்லாம் யாரும் கிடையாது. எல்லாரும் எல்லாருடைய படமும் பார்ப்பாங்க. குறிப்பிட்ட சில பேர் ஒரு 300 ஐடி வச்சுகிட்டு பரப்புறது தான் வெறுப்பு. அவங்களும் படம் பார்ப்பாங்க. ஆனால் கள எதார்த்தம் வேற... நம்ம பசங்க களத்துல இறங்கி கலக்குவாங்க. அன்பை கொடுத்தால் திருப்பி அன்பையே கொடுப்போம். அன்பின் எழுச்சிதான் எல்லாமே." என தனுஷ் கூறினார்




















