Dhanush- MariSelvaraj: மீண்டும் இணைந்த தனுஷ்- மாரி செல்வராஜ் வெற்றிக்கூட்டணி..! கர்ணனை போல இன்னொரு சம்பவமா?
நடிகர் தனுஷ் 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் தயாரிப்பாளராக களமிறங்க உள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் தனுஷ் 5 ஆண்டுகளுக்கு பிறகு, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படத்தை தயாரிப்பதன் மூலம் மீண்டும் தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். தற்போது தனுஷ் பிரபல இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கும் புதிய படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த படத்தின் நடிகர், நடிகைகள், மற்ற படக்குழு பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி:
நடிகர் தனிஷ் - இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணி ஏற்கனவே ‘கர்ணன்’ திரைப்பட்டத்தில் அசத்தியிருந்தார்கள். கதையும், தனுஷின் நடிப்பும் மிகவும் சிறப்பாக இருந்தது. தற்போது இருவரும் மீண்டும் இணைந்து உருவாக்கும் திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிப்பாரா இல்லை புதுமுகமாக இருக்குமா என்பது குறித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நடிப்பின் “அசுரன்”
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தனுஷ். நடிக்கவே தகுதியில்லாத நபர் என விமர்சகர்களால் முத்திரை குத்தப்பட்ட தனுஷ் அதன்பின் கடந்த 20 ஆண்டுகளில் செய்தது எல்லாம் சம்பவம் அல்ல.. சரித்திரங்கள். தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என பல பரிணாமங்கள் எடுத்த தனுஷ் தயாரிப்பாளராகவும் மாறினார்.
2012 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடித்த படம் “3”. இந்த படத்தில் இருந்து தயாரிப்பாளராகவும் தனுஷ் அடுத்த அடியெடுத்து வைத்தார். வுண்டர்பார் என்ற பெயரில் அவர் தொடங்கிய நிறுவனத்தில் தன்னுடைய படங்களையும்,பிறர் நடித்த படங்களையும் தனுஷ் தயாரித்தார். குறிப்பாக தன்னுடன் சிறிய கேரக்டரில் நடித்த நடிகர் சிவகார்த்திகேயனை, தான் தயாரித்த எதிர்நீச்சல் படத்தின் மூலம் ஹீரோவாக்கி அழகு பார்த்தார் தனுஷ்.
சிவகார்த்திகேயனை ஹீரோவாக்கிய தனுஷ்
3 படத்துக்குப் பின் எதிர்நீச்சல்,வேலையில்லா பட்டதாரி, ஷமிதாப், காக்கிச் சட்டை, காக்கா முட்டை, மாரி, நானும் ரௌடி தான், தங்க மகன், விசாரணை, அம்மா கணக்கு, சினிமா வீரன், பவர் பாண்டி, வேலையில்லா பட்டதாரி 2, தரங்கம், காலா, வட சென்னை, மாரி-2 ஆகிய படங்களை தயாரித்தார். ரஜினியை வைத்து அவர் “காலா” படத்தை தயாரித்து இருந்தது அப்போது சினிமா உலகில் பெரிதாக பேசப்பட்டது.
ஆனால் மாரி 2 படத்துக்குப் பின் அவரது வுண்டர்பார் நிறுவனம் படம் ஏதும் தயாரிக்கவில்லை. காலா படத்தை தொடர்ந்து மாரி 2 படம் சரியாக போகவில்லை என்பதால் தனுஷ் படங்களை தயாரிப்பதை நிறுத்தியிருந்தார். மாரி 2 படத்திற்கு பிறகு அசுரன், தி எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜர்னி, எனை நோக்கி பாயும் தோட்டா, பட்டாஸ், கர்ணன், ஜகமே தந்திரம், அட்ராங்கி ரே, மாறன், தி க்ரே மேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட 12 படங்களில் தனுஷ் நடித்தார்.
ஆனால் திரையில் வேலையில்லா பட்டதாரி படத்தின் தீம் மியூசிக் உடன் தோன்றும் வுண்டர்பார் நிறுவன பெயரை காணாமல் இருக்க முடியவில்லை என ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் வுண்டர்பார் நிறுவனம் மீண்டும் படத் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. இதுதொடர்பாக இன்று மதியம் பதிவொன்று வெளியான நிலையில் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
அதன்படி தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.