Actor Dhanush: முகத்தை பார்த்து பேசுங்க.. மனநோய்க்கு ஆளாகாதீங்க.. கேப்டன் மில்லர் விழாவில் தனுஷ் சொன்னது என்ன?
கேப்டன் மில்லர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனநலம் என்பது வேடிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம் இல்லை என கேப்டன் மில்லர் பட விழாவில் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
சத்யஜோதி நிறுவனம் சார்பில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் - நடிகர் தனுஷ் கூட்டணி இணைந்துள்ள படம் “கேப்டன் மில்லர்”. இந்த படத்தில் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், காளி வெங்கட், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள கேப்டன் மில்லர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டாரங்கில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் தனுஷ், படம் பற்றிய பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதேசமயம் நடிகர் தனுஷ் அடிக்கடி “எண்ணம் தான் வாழ்க்கை.. எண்ணம் போல தான் வாழ்க்கை” என தனது பேச்சின் போது குறிப்பிடுவார். இதனால் அவரிடம் சில கேள்விகளை கேட்டு, இதில் ‘எண்ணம்’ என்பது எப்படி இருக்க வேண்டும் என்ற பதிலை தொகுப்பாளினி டிடி கேட்டார். அதற்கு தனுஷ் அளித்த பதில்களை காணலாம்.
கேள்வி: தோல்வி வந்தால் எண்ணம் எப்படி இருக்க வேண்டும்?
பதில்: தோல்வி வந்தால் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
கேள்வி: ப்ரண்ட்ஸ் விஷயத்தில் எண்ணம் எப்படி இருக்க வேண்டும்?
பதில்: ஜி.வி.பிரகாஷ்குமார் மாதிரி. அதாவது கஷ்டம், நஷ்டம் என எல்லாத்துலேயும் கூட இருக்குறவன் தான் நண்பன். அப்படித்தான் ஜி.வி. பிரகாஷ் எனக்கு இருக்கிறார்.
கேள்வி: சமூக வலைத்தளங்கள் பற்றிய உங்களுடைய எண்ணம் என்ன?
பதில்: சமூக வலைத்தளங்கள் ஒரு மிகப்பெரிய காலத்திருடன். உங்களுக்கே தெரியாமல் உங்கள் வாழ்க்கையின் மதிப்புமிக்க மணித்துளிகளை திருடி கொண்டிருக்கிறது. நொடிப்பொழுதில் நம்முடைய வாழ்க்கை சட்டென்று முடிந்து விடும். அதில் பாதி நேரம் போனை பார்த்துக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் இருப்போம். 4 பேர் சேர்ந்த கொஞ்சம் முகத்தை பார்த்து பேசுங்கப்பா. போனை பார்த்து பேசாதீர்கள். அது ஒரு மனநோய். பேசாமல் 90ஸ் காலக்கட்டத்திற்கே போய் விடலாம் போல என தோன்றுகிறது.
கேள்வி: மனநலம் பற்றிய உங்கள் கருத்து?
பதில்: மனநலம் என்பது வேடிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம் இல்லை. ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும். சுற்றி இருப்பவர்களும் அதை உணர்ந்து ரொம்ப தெளிவா அன்பால் மட்டுமே அணுகி சரி செய்ய வேண்டிய விஷயம். நாம் மனதால் தைரியமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அதற்காக நாம் பண்ண வேண்டியது எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.