Daniel Balaji: எதிலும் நம்பிக்கை முக்கியம்: அம்மாவின் ஆசைக்காக கோயில் கட்டிய நடிகர் டேனியல் பாலாஜி...
திருவள்ளூரில் தனது அம்மாவின் ஆசைக்காக கோயில் கட்டிய நடிகர் டேனியல் பாலாஜி அது உருவான விதம் குறித்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வில்லத்தன நடிப்பின் மூலம் தனக்கென தனி இடம் பிடித்த நடிகர் டேனியல் பாலாஜி நேற்று இரவு காலமானார். அவர்களது நினைவுகள் சில...
திருவள்ளூரில் தனது அம்மாவின் ஆசைக்காக கோயில் கட்டிய நடிகர் டேனியல் பாலாஜி அது உருவான விதம் குறித்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மறைந்த நடிகர் முரளியின் உறவினரான நடிகர் டேனியல் பாலாஜி, கமல்ஹாசன் எடுக்க நினைத்து கைவிடப்பட்ட மருதநாயகம் படத்தில் புரொடக்ஷன் மேனேஜராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். தொடர்ந்து ராதிகா நடித்த சீரியலான “சித்தி” டேனியல் என்ற கேரக்டரில் நடித்தார். அதன்படி அவருடைய பெயர் பாலாஜி என்பது டேனியல் பாலாஜியாக மாறியது. பின்னர் அலைகள் சீரியலிலும் நடித்தார்.
சினிமா எண்ட்ரீ
2002 ஆம் ஆண்டு வெளியான ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்த டேனியல் பாலாஜிக்கு 2006 ஆம் ஆண்டு வெளியான வேட்டையாடு விளையாடு படம் திருப்பு முனையாக அமைந்தது. தொடர்ந்து பொல்லாதவன், முத்திரை, வை ராஜா வை, அச்சம் என்பது மடமையடா, பைரவா, இப்படை வெல்லும், மாயவன், வடசென்னை, பிகில் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டேனியல் பாலாஜி நடித்துள்ளார். இவர் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியிலுள்ள ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலை தனது சொந்த செலவில் கட்டியுள்ளார். இந்த கோயிலுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. தனது அம்மாவின் ஆசைக்காக டேனியல் பாலாஜி இந்த கோயிலை கட்டியிருந்தார். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
கோயில் உருவான விதம்
இதனிடையே நேர்காணல் ஒன்றில் கோயில் உருவான விதம் பற்றி டேனியல் பாலாஜி பகிர்ந்துள்ளார். அதில்,”முறையான ஆய்வுகள் செய்து இந்த கோயில் கட்டப்பட்டதாகவும், கட்டுவதற்கு முன் கோயில்கள் வரலாறு பற்றி தெரிந்து கொண்டேன்” எனவும் கூறியுள்ளார்.
மேலும் ”கோயில்களை பொறுத்தவரை சவுண்டு எனர்ஜி என்பது முக்கியமானது என்பதால் ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலும் அந்த வசதி செய்யப்பட்டுள்ளது. எனக்கு இறை நம்பிக்கை உண்டு என்றாலும் சிறு வயதில் இருந்தே அது வேண்டும் இது வேண்டும் என வேண்டியதில்லை. என்னைப் பொறுத்த வரை கடவுள் என் பக்கத்தில் இருக்க வேண்டும் என்பது மட்டுமே அதிகப்பட்சமாக வேண்டுதலாக இருந்துள்ளது. கோயில் கட்டும் வேலைப்பாடுகளின் போது நான் ஈடுபட காரணம் எனக்கு இருக்கும் ரசனை மட்டும் தான். மேலும் எதிலும் நம்பிக்கை என்பது முக்கியம். என்னுடைய இறைத்தாய்க்கு நான் கட்டிக்கொடுத்த வீடுதான் இந்த கோயில். ” எனவும் டேனியல் பாலாஜி கூறியுள்ளார்.